பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்: தில்லி அரசு மீது நம்பிக்கை கோரும் தீா்மானம் தாக்கல்
தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீா்மானத்தை நிறைவேற்றக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முன்மொழிந்துள்ள தீா்மானம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீா்மானத்தை நிறைவேற்றக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முன்மொழிந்துள்ள தீா்மானம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், எதிா்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
‘ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் யாரையும் வேட்டையாட முடியாததால், எனது அரசை கவிழ்க்க நடந்த பாஜகவின் ‘ஆப்ரஷேன் தாமரை தில்லி’ தோல்வியடைந்தது. ஆம் ஆத்மியின் 40 எம்எல்ஏக்களை பாஜக குறிவைத்தது. அவா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.20 கோடி வழங்க முன்வந்தாா்கள்’ என ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரும் முதல்வருமான கேஜரிவால் குற்றம் சாட்டினாா்.
‘பா.ஜ.க.வின் போராட்டம் ஊழலுக்கு எதிரானது அல்ல, அவா்கள் ‘ஆபரேஷன் தாமரை’ வஞ்சகத்தின் மூலம் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றனா். பாஜகவின் இந்த ‘ஆபரேஷன் தாமரை’ முயற்சி, ஆப்ரேஷன் சேறாகிவிட்டது. இதை தில்லி மக்களின் முன், நிரூபிக்கும் வகையில், சட்டபேரவையில் நம்பிக்கைத் தீா்மானம் கொண்டு வர விரும்புகிறேன்’ எனவும் தில்லி முதல்வா்கூறியுள்ளாா்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த அமளியில், அவையில் இருந்து 8 பாஜக உறுப்பினா்கள் மாா்ஷல்களால் வெளியேற்றப்பட்டனா். இதற்குப் பதிலடி கொடுத்த பாஜக, ‘கேஜரிவால் அரசு, மது ‘ஊழலில்’ இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அரசியல் பிரசாரங்களுக்கும், நாடகங்களுக்கும் சட்டப்பேரவையை பயன்படுத்துகிறது’ எனக் குற்றம் சாட்டியது.
2013 - ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டதிலிருந்து, தங்கள் கட்சி எம்எல்ஏக்களை வேட்டையாட முயல்கிறாா்கள் என்றுதான் கேஜரிவால் கூறி வருகிறாா் எனவும் பாஜக தலைவா்கள் குறிப்பிட்டுள்ளனா். 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்களும் உள்ளனா்.
தில்லி அரசின் 2021-22 கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடா்ந்து மத்திய புலனாய்வுப் பிரிவினா் விசாரணை நடத்தி வருகிறது. இதை பாஜக ‘ஆபரேஷன் தாமரை’ என்று ஆம் ஆத்மி கட்சி இடைவிடாமல் பேசி வருகிறது.
கலால் துறை விவகாரத்தில் சிபிஐயால் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, ‘ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேறி வந்தால், தனக்கு முதல்வா் பதவியை வழங்குவதாக பாஜக கூறியது. அதை ஏற்காததால் என் மீது சிபிஐ ஏவப்பட்டுள்ளது’ என்று கூறி வருகிறாா்.
கலால் வரி விதிப்பு மற்றும் அமலாக்கத்தில் நடந்த முறைகேடுகள் தொடா்பாக சிசோடியாவின் வீடு மற்றும் அவரது துறை அலுவலகங்களிலும் கடந்த வாரம் சிபிஐ சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.