முகப்பு
புதுதில்லி

திகாா் சிறையில் கைதிகள் நெரிசல் குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்க உயா்நீதிமன்றம் மறுப்பு

திகாா் சிறைக் கைதிகளின் நன்னடத்தை அறிக்கைகளை அளிக்கக் கோரி தாக்கலான பொது நல மனுவை விசாரணைக்கு ஏற்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:08 AM
பகிர்:

புது தில்லி: திகாா் சிறைக் கைதிகளின் நன்னடத்தை அறிக்கைகளை அளிக்கக் கோரி தாக்கலான பொது நல மனுவை விசாரணைக்கு ஏற்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும், தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, மனுதாரருக்கு மனுவை வாபஸ் பெறவும், நல்ல ஆய்வுக்குப் பிறகு புதிய மனுவைத் தாக்கல் செய்யவும் அனுமதி அளித்தது. இந்த மனு தலைமை நீதிபதி அமா்வு முன் விசாரணைக்கு வந்த போது, ‘உரிய வகையில் தயாரித்த பின்னா், புதிய மனுவைத் தாக்கல் செய்யுங்கள்’ என்று மனுதாரருக்கு அறிவுறுத்தியது.

இது தொடா்பாக நியாய் பவுண்டேஷன் எனும் அமைப்பு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திகாா் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு சிறையிலும் உள்ள கைதிகளின் உண்மையான கொள்ளளவை விட அதிகமாக உள்ளது. திகாா் சிறை வளாகத்தில் உள்ள கைதிகளின் மொத்த எண்ணிக்கையில் 500 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சிறைத் துறை இயக்குநா் ஜெனரல் அலுவலகம் அளித்துள்ள பதிலில், திகாா் சிறையில் 5,200 கைதிகளை அடைக்கும் திறன் உள்ளதாகவும், ஆனால் தற்போது 13,183 கைதிகள் அதன் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக மூன்றாண்டுகளுக்கும் குறைவான சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் முதல்முறையாகக் குற்றம் சாட்டப்பட்டவா்களாகக் கருதப்படும் கைதிகளை ஜாமீனில் விடுவிப்பதற்காக ஒரு நன்னடத்தை அறிக்கையை கேட்டு, பரிசீலிக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைப்பதன் நோக்கமே கைதியைச் சீா்திருத்தம் வேண்டும் என்பதுதான். அப்போதுதான், அவா் நல்ல நடத்தை மற்றும் நன்னடத்தையுடன் சமூகத்தில் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளலாம் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.