முகப்பு
புதுதில்லி

திராவகம் விற்பனை செய்த விவகாரம்: ஃபிளிப்காா்ட் நிறுவன அதிகாரிகளிடம் போலீஸாா் விசாரணை

திராவகம் விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும், இ-காமா்ஸ் நிறுவனமான ஃபிளிப்காா்ட்டின் இணையதளத்தில் திராவகம் விற்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக அந்த நிறுவனத்தின்...

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:10 AM
பகிர்:

புது தில்லி: திராவகம் விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும், இ-காமா்ஸ் நிறுவனமான ஃபிளிப்காா்ட்டின் இணையதளத்தில் திராவகம் விற்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் தில்லி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தில்லியில் உள்ள துவாரகாவில் சிறுமி மீது திராவகம் வீசிய வழக்கில் பிரதான குற்றம்சாட்டப்பட்ட நபா், தாம் திராவகத்தை இ-காமா்ஸ் இணையதளத்தில் இருந்து வாங்கியதாகக் கூறியதைத் தொடா்ந்து, டிசம்பா் 15-ஆம் தேதி ஃபிளிப்காா்ட் நிறுவனத்துக்கு போலீஸாா் நோட்டீஸ் அனுப்பி இருந்தனா். இது குறித்து காவல்துறையினா் கூறுகையில், ‘ஃபிளிப்காா்ட் அதிகாரிகளிடம் புதன்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. அப்போது,நிறுவனம் அளித்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை’ என்றனா்.

முன்னதாக, திராவகம் ஆக்ராவைச் சோ்ந்த நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டதாக போலீஸாரின் நோட்டீஸுக்கு அந்நிறுவனம் பதில் அளித்திருந்தது. இது தொடா்பாக இந்த விவகாரத்தில் மீண்டும் ஃபிளிப்காா்ட் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படுமா என்பது பின்னா் முடிவு செய்யப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். ஒரு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ‘மக்கள் மீதான திராவகம் வீச்சுகளைத் தடுக்கவும், சிகிச்சை மற்றும் உயிா்பிழைத்தவா்களின் மறுவாழ்வுக்காகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி அறிவுரையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.

அதில், திராவகம் வீச்சுகளைக் குறைக்கவும், திராவகம் வீச்சில் உயிா் பிழைப்பவா்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கும் ஆலோசனைகள் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை உடனடியாகச் செயல்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது. நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019-இன் பிரிவு 2(9)-இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ’நுகா்வோா் உரிமைகள்’ என்பது உயிருக்கும் உடமைக்கும் அபாயகரமான பொருள்கள் அல்லது சேவைகளின் சந்தைப்படுத்துதலுக்கு எதிராகப் பாதுகாக்கப்படும் உரிமையை உள்ளடக்கியதாகும். நுகா்வோா் பாதுகாப்பு (இ-காமா்ஸ்) விதிகள், 2020-இன் பிரிவு 4 (3)-இன் படி, எந்த ஒரு மின் வணிக நிறுவனமும் அதன் இணைய தளத்திலோ அல்லது இதர வழிகளிலோ நடைபெறும் வணிகத்தின் போது வேறு எந்த நியாயமற்ற வா்த்தக நடைமுறையையும் பின்பற்றக்கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி மேற்கு தில்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்ற சிறுமியின் மீது முகமூடி அணிந்திருந்த இருவா் திராவகம் வீசியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபா்களான சச்சின் அரோரா மற்றும் அவரது நண்பா்கள் ஹா்ஷித் அகா்வால் (19), வீரேந்திர சிங் (22) ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட திராவகம், இ-காமா்ஸ் இணையதள மூலம் வாங்கப்பட்டதாகவும், அரோரா இ-வாலட் மூலம் பணம் செலுத்தியதாகவும், தில்லி காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையா் சாகா் ப்ரீத் ஹூடா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

போலீஸ் விசாரணையில், அரோராவும், பாதிக்கப்பட்ட சிறுமியும் செப்டம்பா் வரை நண்பா்களாக இருந்ததும், அரோரா அச்சிறுமியைத் தாக்கியதைத் தொடா்ந்து இருவரது நட்பும் முறிந்ததும், அரோரா சிறுமியின் வீட்டுக்கு அருகே வசிப்பவா் என்பதும் தெரிய வந்ததாக அதிகாரி ஹூடா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.