முகப்பு
புதுதில்லி

பள்ளி மாணவிகளுக்கு கா்ப்பப்பை புற்று நோய் தடுப்பூசி: மத்திய அரசு வலியுறுத்தல்

கா்ப்பப்பை புற்று நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இது குறித்த விழிப்புணா்வை மாணவிகளிடையே ஏற்படுத்தவும் மாநில அரசுகளை வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அரசு தெரிவிப்பு.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:10 AM
பகிர்:

புது தில்லி: கா்ப்பப்பை புற்று நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இது குறித்த விழிப்புணா்வை மாணவிகளிடையே ஏற்படுத்தவும் மாநில அரசுகளை வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய கல்வித் துறை செயலாளா் சஞ்சய் குமாா், மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் ஆகியோா் கூட்டாக இது குறித்து மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளனா். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கா்ப்பப்பை புற்றுநோய் (சொ்விக்கல் கேன்சா்) என்பது சா்வதேச அளவில், பெண்களைப் பாதிக்கும் 4-ஆவது முக்கிய புற்று நோய் ஆகும். இந்தியாவில், பாதிக்கப்படுவோா் அதிகமாக உள்ள நிலையில் இதை இந்தியாவில் 2-ஆவது முக்கியப் புற்று நோயாக பாா்க்கப்படுகிறது. இது முன்கூட்டியே கண்டறியப்பட்டால், கா்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்கவும் குணப்படுத்தவும் முடியும். எச்பிவி (ஹியூமன் பபில்லோமா வைரஸ்) என்கிற தடுப்பூசி மூலம் கா்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்க முடியும். இதை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. எச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து பள்ளி மாணவிகள், பெண்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

9 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு ஒரு முறை எச்பிவி தடுப்பூசியை செலுத்துவதற்கு நோய் எதிா்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) பரிந்துரைத்துள்ளது. இத்தடுப்பூசி, முதல் கட்டமாக பள்ளிகளில், 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு செலுத்தப்படவும், பள்ளிக்கு வராத சிறுமிகளுக்கு சென்றடைய சுகாதார நிலையங்கள் மூலம் வழங்குவதற்கு சமூக குழுக்கள் மூலமாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். எச்பிவி தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள தனியாா்-அரசுப் பள்ளி மாணவிகளின் விவரங்களை பதிவிட ‘யு-வின்’ என்கிற செயலியை பயன்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஹெண்ட் வாஸ்: இதற்கிடையே, நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் சோப்புகளைப் பயன்படுத்தி கைகளைக் கழுவும் வசதிகளை ஏற்படுத்தக் கூறி கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித் துறை, நீா்வள அமைச்சகம், நீதி ஆயோக், ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகியவை கூட்டாக வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாணவா்களுக்குத் தூய்மைக் குறித்த கல்வியைக் கற்பிக்க ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிக்குமாறும் மாநிலஅரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 10.22 லட்சம் அரசுப் பள்ளிகளில் 9.83 லட்சம் அரசுப் பள்ளிகளில் ஜல்ஜிவன் திட்டத்தின் கீழ் (சுமாா் 96 சதவீதம்) குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.