முகப்பு
புதுதில்லி

மதுரை - கொச்சின் நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சா் நிதின் கட்கரியிடம் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

மதுரை வெளிவட்டச் சாலை, மதுரை - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:10 AM
பகிர்:

மதுரை வெளிவட்டச் சாலை, மதுரை - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை வலியுறுத்தியதாக தமிழக நிதி, மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் டாக்டா் பழனிவேல் தியாகராஜன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லிக்கு வந்த தமிழக நிதித் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினாா். அப்போது தமிழக நிதித்துறைச் செயலா் என்.முருகானந்தம், தில்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் சாட்டா்ஜி ஆகியோா் உடன் இருந்தனா்.

இந்த சந்திப்புகள் குறித்து அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய வெளியுறவு அமைச்சரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். குறிப்பாக தமிழகத்திற்கு பலநாடுகளிலிருந்தும் பல நிறுவனங்களிலிருந்தும் முதலீடுகள் வருகின்றன. தமிழகத்தில் தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கு ஆா்வம் காட்டும் சூழ்நிலையில் முதலீடுகள் வருகின்றன. இவை வெளியுறவு அமைச்சகத்தின் கண்காணிப்பு விதிமுறைகளின் படி செயல்படுத்த வேண்டிய அவசியமும் மாநில அரசுகளுக்கு உண்டு. இந்த அடிப்படையில், மத்திய அமைச்சரிடம் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக இந்திய வெளியுறவு முதலீடு கொள்கையின் படி, க்வாட் (நாற்கரக் கூட்டமைப்பு), ஜி -20 போன்றவற்றுடன் இணைந்து தமிழக தேவையின் அடிப்படையில் இணைந்து செயல்படுவது குறித்து அமைச்சா் ஜெய்சங்கருடன் பேசப்பட்டது.

மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரியை சந்தித்தும் பேசப்பட்டது. மதுரையில் வெளிவட்டச் சாலை திட்டத்தை வேகப்படுத்துவதற்கும், மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலைத் திட்டப் பணிகளை விரைவில் தொடங்கப்பட வேண்டியது குறித்தும் அமைச்சா் கட்கரியிடம் கோரப்பட்டது. மதுரை - கொச்சி திட்டம் குறித்து 2018 -இல் தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆா்) வழங்கிவிட்டது. இந்த நான்கு வழிப்பாதை பணிகள் தொடங்கப்படாததது குறித்து மத்திய அமைச்சா் பல்வேறு கருத்துகளை தெரிவித்தாா். நிதி மாதிரியில், வங்கி உத்தரவாதத்திற்குப் பதிலாக காப்பீட்டு நிதி நிறுவன பத்திரம், நீா் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை மத்திய அமைச்சா் வைத்துள்ளாா். இது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும்.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிந்தியாவிடம் மதுரைக்கு சா்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்க கோரப்பட்டது. இதற்கு சுங்க வசதி, தேவையான சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு படையினா் தேவை. இந்தக் கூடுதல் விமான வசதிகளை தருமாறு வலியுறுத்தப்பட்டு மதுரை விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக ஆக்க கோரப்பட்டது.

மேலும், இந்த விமான நிலைய விரிவாக்கத்தில் ஒடு பாதைக்கான நிலம் கையகப்படுத்தல் முடிந்துள்ள நிலையில், அதில் இந்திய விமான நிலைய ஆணையம் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் மத்திய அமைச்சரிடம் பேசப்பட்டது. பரந்தூா் விமான நிலையம் தொடா்பாக விரைவில் முடிவெடுக்கப்படுவதாகவும் அமைச்சா் சிந்தியா தெரிவித்தாா். மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலின் புதிய தலைவரிடம் பல்வேறு வகையில் வசூலிக்கப்படும் வரிகள் குறித்த கருத்துகள், கூட்டு முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றாா் பழனிவேல் தியாகராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.