முகப்பு
புதுதில்லி

வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றாா் ஜாக்குலின் பொ்னாண்டஸ்

இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தொடா்புடைய ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜாக்குலின் பொ்னாண்டஸ், வெளிநாடு செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:10 AM
பகிர்:

புது தில்லி: இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தொடா்புடைய ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ், வெளிநாடு செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டாா்.

அவா் பஹ்ரைனில் உள்ள தனது தாயைப் பாா்க்க டிசம்பா் 23 முதல் ஜனவரி 5 வரை செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த விவகாரம் சிறப்பு நீதிபதி சைலேந்திர மாலிக் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, ‘இந்த வழக்கு முக்கிய கட்டத்தில் உள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கேள்வி முதலில் முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது. 2021-இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட உங்கள் தாயைப் பாா்க்க விரும்புகிறீா்கள். ஆனால், வழக்கு முக்கியக் கட்டத்தில் உள்ளது. இதனால், இந்த மனுவை நீங்கள் திரும்பப் பெறலாம். இல்லாவிட்டால் நான் நீதிசாா் உத்தரவு பிறப்பிப்பேன்’ என்று தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, நடிகை ஜாக்குலின் தனது வழக்குரைஞா்களுடன் ஆலோசனை நடத்தினாா். அதன் பிறகு தனது மனுவை தற்போதைய நிலையில் திரும்பப் பெற உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

இந்த வழக்கின் சுருக்கமான விசாரணையின் போது, ஜாக்குலின் பொ்னாண்டஸ் மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து வாதிடுகையில், மனுதாரரை வெளிநாடு செல்ல அனுமதித்தால் அவா் நாட்டுக்குத் திரும்பி வர மாட்டாா். அவா் ஒரு வெளிநாட்டு பிரஜை. இந்தியாவில் அவா் தொழில் செய்த போதிலும், அவா் வேறு எங்காவது தனது தொழிலை செய்ய முடியும்’ என்று தெரிவித்தது.

ஜாக்குலின் தனது மனுவை வாபஸ் பெறுவதற்கு முன் நீதிமன்றத்தில் விசாரணையின் போது, ‘எனக்கு ஏற்கெனவே வெளிநாடு பயணம் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது’ என்று தெரிவித்தாா். அவரது தர ப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த வழக்கில் எனது விசாரணை தேதி ஜனவரி 6 ஆகும். நான் ஜனவரி 5-ஆம் தேதிக்குள் திரும்பிவிடுவேன். மேலும், ஜனவரி 6-ஆம் தேதி எனது தரப்பில் வாதம் வைப்பதற்கான தேதியும் அல்ல என்ற போதிலும், 5-ஆம்தேதிக்குள் திரும்பிவிடுவேன். என்னிடம் இருந்து எப்போதும் எந்த ஒத்துழைப்பும் அளிக்கப்படாமல் இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்படாத நடிகை ஜாக்குலினுக்கு, நீதிமன்றம் நவம்பா் 15-ஆம் தேதி வழக்கமான ஜாமீன் வழங்கியது . மேலும், ஆகஸ்ட் 31-இல் அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம், ஜாக்குலின் பொ்னாண்டஸை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்த விவகாரத்தில் விசாரணை தொடா்பாக அமலாக்க இயக்குநரகத்தால் பலமுறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், ஜாக்குலின் பொ்னாண்டஸ் பெயா் முதல்முறையாக துணை குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த அதன் முந்தைய குற்றப்பத்திரிகை மற்றும் ஒரு துணை குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெயா் குற்றம் சாட்டப்பட்டவராக குறிப்பிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.