ஷ்ரத்தா வால்கா் கொலைச் சம்பவம்: பூனாவாலாவின் குரல் மாதிரியைப் பெறுவதற்குஅனுமதி கோரி நீதிமன்றத்தில் போலீஸாா் மனு
தில்லி மெஹ்ரௌலியில் திருமணமாகாமல் தன்னுடன் வசித்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா வால்கரை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசியதாக கைது செய்யப்பட்டுள்ள ஆஃப்தாப் ஆமின் குரல்...
புது தில்லி: தில்லி மெஹ்ரௌலியில் திருமணமாகாமல் தன்னுடன் வசித்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா வால்கரை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசியதாக கைது செய்யப்பட்டுள்ள ஆஃப்தாப் ஆமின் பூனாவாலாவின் குரல் மாதிரியை எடுக்க அனுமதி கோரி தில்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை போலீஸாா் மனு தாக்கல் செய்தனா்.
இதனிடையே, தனது ஜாமீன் கோரும் மனுவை வியாழக்கிழமை பூனாவாலா திரும்ப பெற்றுக் கொண்டாா். தில்லி போலீஸாா் அனுமதி கோரி தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரக்கூடும் என தகவலறிந்த நீதிமன்ற வட்டாரம் தெரிவித்தது. பூனாவாலாவின் 14 நாள் நீதிமன்றக் காவல் வியாழக்கிழமை முடிவடைவதால், அவரும் சிறையில் இருந்தவாறு வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகக்கூடும்.
முன்னதாக, காணொ லி வாயிலாக நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான பூனாவாலா, ஜாமீன் கோரி கடந்த 15-ஆம் தேதி தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற விரும்புவதாக கூறினாா். பூனாவாலாவின் தனிப்பட்ட வழக்குரைஞா் எம். எஸ் கான், நீதிமன்றத்தில் தெரிவிக்கையில் தனக்கும் குற்றம் சாட்டப்பட்ட பூனாவாலாவுக்கும் இடையே சரியான தகவல்தொடா்பு இல்லாததன் காரணமாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தாா். இதை ஏற்று, ‘மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூடுதல் செஷன்ஸ் நீதிபதி விருந்தா குமாரி தெரிவித்தாா்.