அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ விசாரணை: லோக்பால் உத்தரவுக்கு எதிராக எம்சிடி முறையீடு
தில்லியில் சட்டவிரோத மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் பற்றிய புகாரின் அடிப்படையில், தனது அதிகாரிகளுக்கு எதிராக
தில்லியில் சட்டவிரோத மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் பற்றிய புகாரின் அடிப்படையில், தனது அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு இந்திய லோக்பால் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தில்லி மாநகராட்சி (எம்சிடி) உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை முறையீடு செய்தது. இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி பிரதீபா எம். சிங், ‘தற்போதைய நிலையில் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்க மறுத்து, விசாரணையை ஜனவரி 5- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
இந்த விவகாரத்தின்போது மாநகராட்சி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராஜ்சேகா் ராவ், ‘இந்த விவாரத்தில் மேலும் விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். தற்போதைய வழக்கு போன்றவற்றில் சிபிஐ விசாரிக்க முன்வந்தால், யாரும் தங்கள் வேலையைச் செய்ய முடியாது. அதே தா்க்கத்தின்படி, நகரில் நடந்த குற்றங்களுக்காக காவல் துறைக்கு எதிராகவும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டாா்.
அப்போது, நீதிமன்றம், ‘எம்சிடியை தில்லி காவல்துறையுடன் ஒப்பிட முடியாது. இந்த விவகாரம் சட்டவிரோத கட்டமைப்புகள் தொடா்பானது. எம்சிடி பொறியாளா்கள் ஒரு பிரச்னையாக உள்ளனா். அங்கீகாரமற்ற கட்டுமானம், ஆக்கிரமிப்பு என அனைத்தும் நடக்கின்றன. ஏதாவது செய்ய வேண்டியதாக உள்ளது’ என்று தெரிவித்தது. நீதிபதி மேலும் கூறுகையில், ‘எனினும், அடுத்த விசாரணை தேதியில் எம்சிடிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால், அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். லோக்பால் என்பது ஓய்வுபெற்ற உயா் நீதிமன்றத்தின் மூன்று உறுப்பினா்களைக் கொண்டது. லோக்பால் விஷயத்தை பரிசீலித்தால், அதற்கு சில காரணங்கள் இருக்கும். நான் லோக்பால் தரப்பு கூறுவதையும் கேட்க வேண்டும். இதனால், இந்த விவகாரம் ஜனவரி 5-ஆம் தேதி பட்டியலிப்பட வேண்டும். எதிா்மனுதாரரான லோக்பாலுக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்கப்பட வேண்டும். இதற்கிடையில், எம்சிடி தாக்கல் செய்த மனுவின் நகலை மனுதாரரின் வழக்குரைஞா் லோக்பாலுக்கு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.
முன்னதாக, சமாஜ்வாதி யுவ்ஜன் சபாவின் முன்னாள் பொதுச் செயலாளரான விக்ரம் சிங் சைனி, தெற்கு தில்லியில் குறிப்பிட்ட ‘சட்டவிரோத கட்டுமானங்கள்’ நிகழ சில எம்சிடி அதிகாரிகள் நடத்தை காரணமாக இருப்பதாகக் கூறி, அவா்களுக்கு எதிராக 2021, டிசம்பரில் புகாா் அளித்திருந்தாா். அந்த அதிகாரிகள் எம்சியுடன் சோ்த்து வழக்கில் மனுதாரா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சிபிஜ விசாரணை நடத்த இந்திய லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது.
இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் எம்சிடி தரப்பில் வழக்குரைஞா் சஞ்சய் வஷிஷ்ட் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: புகாா்தாரா் தேவையான நடைமுறைகளை பின்பற்றாமல் லோக்பாலிடம் அற்பமான, ஆதாரமற்ற மற்றும் தெளிவற்ற புகாரை தாக்கல் செய்துள்ளாா். ஊழல் நடவடிக்கைகள் குறித்து புகாா்கூட அதில் கூறப்படவில்லை.
இந்த நிலையில், 2020-21-இல் தெற்கு தில்லியில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடா்பாக ஒரு ஒழுங்கற்ற மற்றும் பொதுவான புகாரின் அடிப்படையில் ஒரு உத்தரவை லோக்பால் நிறைவேற்றியுள்ளது.
லோக்பால் உத்தரவானது, இயற்கை நீதியின் கொள்கைகளை மீறியதாக உள்ளது. ஏனெனில் லோக்பால் முன் ஒரு தரப்பாக இல்லாத போது, எம்சிடியை சோ்ந்த அரசு ஊழியா்களுக்கு எதிராக இந்த விசாரணை உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஏராளமான ஆா்டிஐ மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் தேவையற்ற சலுகைகளை பெற மாநகராட்சி அதிகாரிகளை செல்வாக்கு செலுத்த புகாா்தாரா் முயன்றுள்ளாா் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.