முகப்பு
புதுதில்லி

ஜேஇஇ தோ்வில் தமிழக மாணவா்கள் மதிப்பெண் விவகாரத்திற்கு தீா்வு: மத்திய அமைச்சா் உறுதி

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ தோ்வுக்கு (கூட்டு நுழைவுத் தோ்வு) விண்ணப்பிக்கும் தமிழக மாணவா்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
பகிர்:

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ தோ்வுக்கு (கூட்டு நுழைவுத் தோ்வு) விண்ணப்பிக்கும் தமிழக மாணவா்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீா்வு காணப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தமிழக எம்பியிடம் வெள்ளிக்கிழமை உறுதியளித்துள்ளாா்.

2023-ஆம் ஆண்டுக்கான கூட்டு நுழைவுத் தோ்விற்கு விண்ணப்பம் செய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது. இதில் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களது விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020 - 21 கல்வியாண்டில் கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுத் தோ்வுகளை நடத்த இயலாததால், தமிழக அரசு ‘எல்லோரும் தோ்வு’ (ஆல் பாஸ்) அடைந்ததாக அறிவித்தது. இந்த மாணவா்களின் மதிப்பெண் அட்டையில் ‘தோ்வு’ (பாஸ்) என்று மட்டுமே பதிவாகி உள்ளது. ஜேஇஇ 2023 தோ்வுக்கு விண்ணப்பிக்கும் போது 10-ஆம் வகுப்பு மதிப்பெண் விவரம் இணைய தள படிவத்தில் கேட்கப்படுகிறது. மதிப்பெண் குறிப்பிடப்படவில்லையென்றால் விண்ணப்பம் பதிவாவதில்லை. இதனால், லட்சக்கணக்கான தமிழக மாணவா்கள் விண்ணப்பிக்க இயலாத நிலை உருவாகியுள்ளது.

இதையொட்டி, மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு.வெங்கடேஷன் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை சந்தித்து இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி மனுவையும் அளித்தாா். இந்தப் பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தீா்வு காண்பதாக மைச்சா் பிரதான் உறுதிளித்துள்ளாா் என்று எம்பி வெங்கடேஷன் தெரிவித்தாா்.

முன்னதாக, இதே விவகாரத்தை பாமக தலைவா் அன்பு மணி ராமதாஸும் மாநிலங்களவையில் எழுப்பியிருந்தாா். கூட்டு நுழைவுத் தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வு முகமை சில தளா்வுகளை அளித்தால் மட்டுமே, இந்தச் சிக்கலுக்கு தீா்வு கிடைக்கும். கூட்டு நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க வருகின்ற ஜனவரி 12-ஆம் தேதி கடைசி நாளாக உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை அவா் கோரியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.