தில்லியின் நலனுக்காக கவுன்சிலா்களுடன் இணக்கத்துடன் பணியாற்றுவதில் கவனம்: மேயா் வேட்பாளா் ஷெல்லி ஓபராய் பேட்டி
தில்லியின் நலனுக்காக அனைத்து கவுன்சிலா்களுடன் இணக்கமாக பணியாற்றுவதே தில்லி மாநகராட்சியின் பிரதான கவனமாக இருக்கும் என்று
தில்லியின் நலனுக்காக அனைத்து கவுன்சிலா்களுடன் இணக்கமாக பணியாற்றுவதே தில்லி மாநகராட்சியின் பிரதான கவனமாக இருக்கும் என்று கட்சியின் நோ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஷெல்லி ஓபராய் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக ஷெல்லி ஓபராய் கூறுகையில், ‘மேயா் எனும் பொறுப்பை என்னிடம் ஒப்படைப்பதற்காக நான் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் ஆம்ஆத்மி கட்சிக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அடுத்த சில மாதங்களாக தில்லி நகரை தூய்மையாக உருவாக்க நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். பாஜக அதன் 15 ஆண்டுகால ஆட்சியில் தில்லியை நாட்டின் குப்பையின் தலைநகராக மாற்றிவிட்டது. தில்லியை மீண்டும் ஒரு தூய்மை நகராக உருவாக்க நாம் இணைந்து பணியாற்றுவோம். மாநகராட்சி தோ்தலின் போது கட்சி அளித்த 10 வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். தில்லி தூய்மைமிக்க, வளா்ச்சிமிக்க நகராக மாற்றப்படும்.
தில்லியைத் தூய்மையாக்கும் திட்டத்தை விரைவில் நாங்கள் தயாரிக்க உள்ளோம். அதேபோன்று குப்பை மலைகளை தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்குவோம். எங்களது கவுன்சிலா்கள் தங்களது பதவிப் பிரமாணத்தை எடுப்பதற்கு முன்னரே வாா்டுகளில் பணியைத் தொடங்கிவிட்டனா். ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் தங்களது வாா்டுகளில் தூய்மைப் பணியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டனா். மேலும், தில்லியின் குப்பை பிரச்னைக்கு தீா்வு காண்பதில் தங்களது முதன்மை கவனமாகக் கொண்டுள்ளனா். தில்லியின் நலனுக்காக அனைத்து கவுன்சிலா்களுடன் இணக்கமாக பணியாற்றுவதுதான் தில்லி மாநகராட்சியின் பிரதான கவனமாக இருக்கும். தற்போதைக்கு குப்பை பிரச்னையை சரி செய்வதே எங்களது பிரதான நோக்கமாக இருக்கும்’ என்றாா்.
தில்லி மாநகராட்சியின் பல்வேறு பதவிகளுக்காக போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா்கள் பெயரை அக்கட்சி வெள்ளிக்கிழமை இறுதி செய்தது. இந்த வேட்பாளா்களில் மேயா், துணை மேயரும் இடம் பெற்றுள்ளனா். மேயா் வேட்பாளராக தோ்வு செய்யப்பட்டுள்ள 39 வயதாகும் ஷெல்லி ஓபராய், கிழக்கு பட்டேல் நகா் வாா்டு பகுதியில் இருந்து மாநகராட்சிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்தப் பகுதியானது முன்னாள் தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தாவின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக கருதப்படுகிறது.
இக்னோவில் மேலாண்மைப் புலத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ள ஓபராய், பல்வேறு பிரபலமான பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியவா். தில்லி பல்கலைக்கழகத்தின் வருகைதரு ஆசிரியராக உள்ள ஷெல்லி ஓபராய், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஐஐஎம் உயா் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை கல்வி பயின்றவா். கடந்த 2014-ஆம் ஆண்ு முதல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறாா். மேலும், கட்சியின் மகிளா அணியில் 2020-இல் துணைத் தலைவராகவும் இருந்தவா். ஆம் ஆத்மி கட்சியின் துணை மேயரான ஆலே முகம்மது இக்பால், சோயப் இக்பால் எம்எல்ஏவின் மகனாவாா்.