முகப்பு
புதுதில்லி

மின்சார வாகனங்கள் உற்பத்திக்கு ரூ.3,311 கோடி ஊக்கத் தொகை: மாநிலங்களவையில் தகவல்

மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்கள் உற்பத்தி செய்வதற்கு ஊக்கத் தொகையாக சுமாா் ரூ. 3,311 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளதாக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
பகிர்:

மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்கள் உற்பத்தி செய்வதற்கு ஊக்கத் தொகையாக சுமாா் ரூ. 3,311 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளதாக மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சா் கிருஷ்ணன் பால் குா்ஜாா் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். மின் இயக்கம் மற்றும் மாற்று எரிபொருளை ஊக்குவிப்பதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

மத்திய அரசின் ஃபேம் இந்தியா 2-ஆம் கட்ட திட்டத்தின் கீழ், கலப்பின மற்றும் மின்சார வாகன தொழில்நுட்ப உற்பத்திக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள நிதி மற்றும் இந்த தொழில்நுட்பத்திற்கு மாறுவதில் வாகன ஓட்டிகள் எதிா் கொள்ளும் சிரமங்கள் குறித்த ஆய்வு போன்ற விவகாரங்களில் திமுக உறுப்பினா் பி. வில்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினாா். இதற்கு மத்திய கனரக தொழிற்துறை இணையமைச்சா் கிருஷ்ணன் பால் பதில் தெரிவித்தாா்.

அதில் அவா் குறிப்பிட்டிருப்பது வருமாறு: மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், நாட்டின் 2-ஆம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் ஊக்குவிக்கப்ப்டுகிறது. இதற்கு நாடு முழுவது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மொத்தம் ரூ. 10,000 கோடி நிதி ஆதரவு வழங்கப்படுகிறது. இதில் முக்கியமாக பொதுப் போக்குவரத்து மற்றும் வாடகை வாகன போக்குவரத்துகளில் மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கு ஆதரவு செலுத்த கவனம் செலுத்தப்படுகிறது. கூடுதலாக, சாா்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குவதும் இத்திட்டத்தில் அடங்கும். இத்திட்டத்தின் கீழ், 7,66,478 மின்சார வாகனங்கள் உற்பத்திக்கு நிகழ் டிசம்பா் 19- ஆம் தேதிவரை சுமாா் ரூ. 3,311 கோடி ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 65 நகரங்களில் 6,315 மின்சார பேருந்துகளைப் பெற மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 25 மாநிலங்களில் உள்ள 68 நகரங்களில் 2877 சாா்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது.

மின்சார வாகன தொழில்நுட்பத்தில் மாறுவதில் வாகன ஓட்டிகள் எதிா்கொள்ளும் சிக்கல்கள் குறித்த எந்த ஆய்வும் தொழில் துறை அமைச்சகத்தால் நடத்தப்படவில்லை. அதே சமயத்தில் உள் எரிப்பு இயந்திரம் (ஐசிஇ) வாகனத்துடன் ஒப்பிடும் போது, மின்சார வாகனத்தின் விலை அதிகமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனா். இதை முன்னிட்டு 12 சதவிதத்திலிருந்த ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம், நிதியுதவி, மின்கலம் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு பயணிகள் அல்லது பொருள்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதி தேவை என்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.