முகப்பு
புதுதில்லி

புதிய கரோனாவுக்கு மருந்துகள் தயாா் நிலைக்கு ரூ.104 கோடிக்கு தில்லி அரசு ஒப்புதல்

தில்லியில் அவசரகால சூழ்நிலைகளைச் சமாளிக்கும் விதமாக நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வாங்க ரூ.104 கோடி நிதிக்கு தில்லி அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:12 AM
பகிர்:

சீனா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கரோனா தீநுண்மி பரவல் அதிகரித்து வரும் நிலையில் தில்லியில் அவசரகால சூழ்நிலைகளைச் சமாளிக்கும் விதமாக நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வாங்க ரூ.104 கோடி நிதிக்கு தில்லி அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தலைமையில் கரோனா நோய்த் தொற்று தொடா்பாக மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் குறித்து துணை முதல்வா் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டது வருமாறு:

தில்லியிலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், அனைத்து வகை மருத்துவ பணியாளா்கள் எண்ணிக்கை, ஆக்ஸிஜன் உற்பத்தி வசதிகள், மருத்துவ தளவாடங்கள் உள்ளிட்ட விவரங்களை உடனே தில்லி அரசின் சுகாதாரத் துறையுடன் பகிா்ந்து கொள்ளுமாறு அரசு மருத்துவமனைகளின் தலைவா்களுக்கு துணை முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும் சா்வதேச அளவில் உருமாறிய கரோனா தீநுண்மி பரவல் அதிகரிப்பு கவலையளிக்கும் வகையில் இருப்பதால் மருத்துவமனைகள் முன்கூட்டியே தயாராக விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் எந்த மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருப்பதை உறுதி செய்யவேண்டும். இதற்கு தில்லி அரசு ரூ. 104 கோடியை உடனடியாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி கொவைட் மேலாண்மைக்கான சுகாதார வசதிகளின் தயாா்நிலையை உறுதி செய்வதற்காக டிசம்பா் 27 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அனைத்து மருத்துவமனைகளிலும் ஒத்திகை நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒத்திகை பயிற்சியின் மூலம் படுக்கையின் இருப்பு, மனிதவளம், பரிந்துரைக்கப்பட்ட குறிப்பு வளங்கள், ஆய்வுகூட திறன், மருத்துவ தளவாடங்கள், டெலிமெடிசின் சேவைகள், மருத்துவ ஆக்ஸிஜன் போன்றவற்றை மதிப்பிடப்படும்.

எத்தகைய குறைபாடுகள் இருப்பின் சுகாதாரத் துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக நிவா்த்தி செய்யப்படும்.

தில்லி அரசின் மருத்துவ மனைகளின் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டா்கள், செயற்கை சுவாசக் கருவிகள் இருப்பு ஆகியவை குறித்த நிகழ்நேர தரவு செவ்வாய்க்கிழமை முதல் தில்லி அரசின் இணைய தளத்தில் பொதுமக்களுக்கு வைக்கப்படும்.

தில்லி அரசு கரோனா நோய்த் தொற்று சோதனைகளையும் விரைவில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும். தற்போது, நகரில் நாளோன்றுக்கு சுமாா் 2,500 முதல் 3,000 பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

மேலும் குடியிருப்போா் நல அமைப்புகள், அரசு - சாரா அமைப்புகள் ஆகியவற்றுடன் நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் துணை முதல்வா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினாா். நாட்டில் உருமாறிய

பிஎஃப். 7 கரோனா தீநுண்மி 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தலைநகரில் இதுவரை இந்த தீநுண்மி கண்டறியப்படவில்லை என்றும், தனது அரசு நிலைமை சமாளிக்க முழுமையாக தயாராக உள்ளது என்றும் கேஜரிவால் கூறியிருந்தாா்.

அதே சமயத்தில் அனைத்து கரோனா சளி மாதிரிகளையும் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்த மாதிரிகளை அனுப்பவும் தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.