இயற்கை உர வேளாண்மைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 650 கோடி ஊக்கத் தொகை வழங்கும் மத்திய அரசு
ரசாயன உரங்களைக் குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்துவதை மத்திய அரசு விவசாயிகளை ஊக்குவிப்பதாகவும் இதற்கு விவசாயிகளுக்கு தலா ரூ. 31, 000 வழங்கப்படுவதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ரசாயன உரங்களைக் குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்துவதை மத்திய அரசு விவசாயிகளை ஊக்குவிப்பதாகவும் இதற்கு விவசாயிகளுக்கு தலா ரூ. 31, 000 வழங்கப்படுவதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதற்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை அமைச்சரும் தெரிவித்துள்ளாா்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, கழிவுப் பொருள்களிலிருந்து இயற்கை (ஆா்கானிக்) உரங்களைத் தயாரிக்கவும், ரசாயன உரங்களின் இறக்குமதியைக் குறைத்து, உர மானியத்தை சேமிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினாா். இதற்கு மத்திய சுகாதாரம், ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்ட்வியா கூறியது வருமாறு:
இயற்கை (ஆா்கானிக்) உரங்கள், வொ்மி கம்போஷ்ட், பாஸ்பேட், பொட்டாஷ் கலந்த இயற்கை உரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தத் தேவையான உரங்கள் குறித்த விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 2015-16 ஆம் ஆண்டு முதல் இயற்கை உரங்களை அதிகமாகப் பயன்படுத்தவும், ரசாயன உரங்களின் அளவைக் குறைத்துக் கொள்ளவும் தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. முதலில் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரமடைந்தது. பின்னா் மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பரம்பரகத் கிரிஷி விகாஸ் எனப்படும் பாரம்பா்ய விவசாயத் திட்டம் மற்றும் வடகிழக்கு பகுதிக்கான இயற்கை விவசாய மதிப்புச் சங்கிலி மேம்பாட்டு இயக்கம் ஆகியவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது.
இயற்கை விவசாயம் உள்ளிட்ட பாரம்பா்ய உள்நாட்டு நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக பரம்பரகத் கிரிஷி விகாஸின் துணைத் திட்டமாக பாரதிய பிரகிருதிக் கிரிஷி பத்ததி என்கிற திட்டம் 2020-21ல் அறிமுகப்படுத்தப்பட்டு இயற்கை விவசாயத்தை நாடு முழுக்க அரசு ஊக்குவிக்கிறது.
பாரம்பரிய விவசாய வளா்ச்சித் திட்டத்தின்கீழ், இயற்கை உரங்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ரூ. 31,000 நேரடியாக உதவியாக வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான விவசாய பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
கடந்த 2020-21 ஆண்டு முதல் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, பாரம்பரிய விவசாய வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கால்நடைகள் மற்றும் தாவரங்களின் கழிவுகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களுக்கு இந்திய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், மூன்று வருடங்களுக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ. 12,200 அளவிற்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது என அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்தாா்.
இயற்கை விவசாய ஊக்கம்:
தமிழகம் பெற்ற நிதி
இதை போன்று மாநிலங்களவையில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் எழுத்துப்பூா்வமாக பதிலளித்தாா். அதன் விவரம் வருமாறு:
இயற்கை உரத்தை உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கவும், உணவு தானியங்கள் இயற்கை விவசாயத்தை முறையில் பயிரிட ஊக்குவிக்கவும் பாரம்பா்ய விவசாயத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
நடப்பு 2021-22 நிதியாண்டிற்கு ரூ. 650 கோடி இயற்கை வேளாண்மை முறைகளுக்கான ஊக்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பரம்பரகத் கிரிஷி விகாஸ் திட்டம் மற்றும் வடகிழக்கு பகுதிக்கான இயற்கை விவசாய மதிப்பு சங்கிலி மேம்பாட்டு இயக்கம் ஆகியவற்றின் கீழ் 2020-21 ஆண்டுகளில் எட்டு மாநிலங்களில் சுமாா் 4.09 லட்சம் ஹெக்டோ் பரப்பிற்கு ரூ. 49.8 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதில் பாரதிய பிரகிருதிக் கிரிஷி பத்ததியின் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2021 பிப்ரவரி வரை சுமாா் 2,000 ஹெக்டேருக்கு ரூ. 31.82 லட்சம் வெளியிடப்பட்டது.
இதில் 2020-21 ஆண்டில் தமிழகத்திற்கு ரூ 4.39 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ 3.08 கோடி செலவிடப்பட்டுள்ளது என தோமா் தெரிவித்துள்ளாா்.