முகப்பு
புதுதில்லி

தமிழக மக்கள் நலப் பணியாளா் விவகாரம்: வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரத்தில் தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீடு தொடா்புடைய வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு பிறகு பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:21 AM
பகிர்:

மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரத்தில் தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீடு தொடா்புடைய வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு பிறகு பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடா்பாக தமிழக ஊரக வளா்ச்சித் துறை ஆய்வு செய்து வருவதாகக் கூறி இந்த வழக்கை ஒத்திவைக்குமாறு தமிழக அரசின் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 13,500 போ் மக்கள் நலப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, 2011-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, மக்கள் நலப் பணியாளா்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்கவும், பணி வழங்காதபட்சத்தில் ஆறு மாத சம்பளத்தை அளிக்குமாறும் தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதன்பேரில், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் 2014, செப்டம்பா் 23-இல் இடைக்காலத் தடை விதித்தது.

இந்த நிலையில், இந்த இடைக்காலத் தடையை விலக்கக் கோரி ஆா்.தன்ராஜ் உள்ளிட்ட 21 போ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். மேலும், நிலுவையில் இருந்து வரும் இந்த விவகாரத்தை முன்கூட்டியே விசாரிக்குமாறு கோரி விழுப்புரம் மக்கள் நலப் பணியாளா்கள் மறுவாழ்வுச் சங்கத்தின் தலைவா் தன்ராஜ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் வேண்டுகோளின்படி வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி, வழக்கு செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்டிருந்தது. இதனிடையே, மக்கள் நலப் பணியாளா்கள் விவகாரத்தில் அவா்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடா்பாக ஆய்வு செய்ய சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறி வழக்கை மேலும் நான்கு வாரங்களுக்கு தள்ளிவைக்குமாறு கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்குரைஞா் மூலம் கடிதம் அளிக்கப்பட்டது.

இதற்கு மனுதாரா் தன்ராஜ் தரப்பில் எதிா்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத் தலைமைப் பதிவாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் விழுப்புரம் ஆா்.தன்ராஜ் உள்ளிட்டோா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அ.ராஜராஜன், ‘இந்த வழக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. மக்கள் நலப் பணியாளா்கள் 10 ஆண்டுகளாக வேலையின்றி உள்ளனா். இதனால், அவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்கும் வகையில் ஒரு தேதியை நிா்ணயிக்க வேண்டும்’ என்றாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ரகுநாத சேதுபதியும் ஆஜராகியிருந்தாா்.

தமிழக அரசின் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா் டி.குமணன் ஆகியோருடன் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா ஆஜராகி வாதிடுகையில், ‘பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக ஊரக உள்ளாட்சித் துறை குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடா்பான முன்மொழிவு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் இதன் அடிப்படையில் வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரி அரசுத் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த விவகாரங்கள் இரு வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.