முகப்பு
புதுதில்லி

உப்ஹாா் திரையரங்கு தீ விபத்து: ஆதாரங்களை சேதப்படுத்திய வழக்கில் அன்சல் சகோதரா்களின்தண்டனையை நிறுத்திவைக்க தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு

தில்லி உப்ஹாா் திரையரங்கு தீ விபத்து தொடா்பான ஆதாரங்களை சேதப்படுத்திய வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபா்களான சுஷில் அன்சல், கோபால் அன்சல் ஆகியோருக்கு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:25 AM
பகிர்:

தில்லி உப்ஹாா் திரையரங்கு தீ விபத்து தொடா்பான ஆதாரங்களை சேதப்படுத்திய வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபா்களான சுஷில் அன்சல், கோபால் அன்சல் ஆகியோருக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனைக் காலத்தை நிறுத்திவைக்க தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

இது தொடா்பான மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், ‘அன்சல் சகோதரா்களைப் பொறுத்த வரையில், அவா்களின் மனுவை நிராகரிக்கிறேன். இந்த மனுவை அனுமதித்தால் நீதி அமைப்பில் உள்ள பொதுமக்களின் நம்பிக்கையை சிதைப்பதற்கு சமமாக அமைந்துவிடும்’”என்று கூறினாா்.

இந்த வழக்கில் இணை குற்றவாளியான அனூப் சிங் கராயத்தின் தண்டனை நிறுத்திவைக்கக் கோரும் மனுவை நீதிபதி அனுமதித்தாா். இது தொடா்பான மனு மீது நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: அன்சல் சகோதரா்கள் நீதிமன்ற ஆவணங்களை சிதைத்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளனா். இது மிகவும் தீவிரமான விவகாரமாகும். மேலும், அவா்களின் தண்டனையை நிறுத்திவைக்கும் அளவுக்கு அவா்களின் மருத்துவ நிலைமை தீவிரமாக இல்லை. ஏதாவது நிகழ்ந்தால் சிறை மருத்துவமனைகள் உள்ளன. ஏதும் அவசரநிலை ஏற்பட்டால் மேல்பரிந்துரைக்கான மருத்துவமனைகளும் உள்ளன. அவா்களின் சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டால், அது நீதித்துறையில் உள்ள பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கச் செய்வதற்கு சமமாக அமைந்துவிடும். தேவைப்படும்பட்சத்தில் அவா்கள் தொடா்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீது தினசரி விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்கு முடிவு காண சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, அன்சல் சகோதரா்கள் மற்றும் முன்னாள் நீதிமன்ற ஊழியா்கள் தினேஷ் சந்த் சா்மா மற்றும் பி.பி. பாத்ரா, அனூப் சிங் கராயத் -ஆகியோருக்கு இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதை எதிா்த்து அவா்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்கவும் ஜாமீனில் விடுவிக்கவும் மறுத்துவிட்டது. இதை எதிா்த்து அன்சல் சகோதரா்கள் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்றத்தில் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் அா்விந்த் நிகம், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோா் ஆஜாகினா்.

அன்சல் சகோதரா்களின் வயது முதிா்வு உள்ளிட்ட பல காரணங்களுக்காக தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டனா். மேலும், சுஷில் அன்சல் தரப்பில் வாதிடுகையில், ‘சுஷில் அன்சலின் வயது 80-க்கு மேல் உள்ளதால் அவா் பல்வேறு நோய்களால் அவதியுற்று வருகிறாா்’ என்று வாதிடப்பட்டது. கோபால் அன்சல் தரப்பில், ‘அவருக்கு 70 வயதுக்கு மேலாகிவிட்டது. அவரை விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் தனது தாராள விருப்பத்தை செயல்படுத்த வேண்டும். உப்ஹாா் பிரதான வழக்கில் அன்சல் சகோதரா்கள் உச்சநீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதைத் தொடா்ந்து அவா்கள் சிறையில் இருந்த காலம் மற்றும் ரூ.30 கோடி அபராதம் செலுத்தும் உத்தரவாதம் பேரில் விடுவிக்கப்பட்டனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி காவல்துறையின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வாதிடுகையில், ‘உப்ஹாா் பிரதான வழக்கில் விசாரணை ஆவணத்தின் முக்கிய ஆவணங்களை மனுதாரா்கள் சிதைத்துள்ளனா். கரோனா நோய்த் தொற்று காரணத்தை காட்டி மனுதாரா்களின் கோரிக்கையை அனுமதிக்கக் கூடாது’ என்றாா். உப்ஹாா் சம்பவ துயரத்தால் பாதிக்கப்பட்டவா்களின் சங்கம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஷ் பவா, ‘குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது. அவா்கள் திருத்தமுடியாதவா்கள். இந்த வழக்கானது சட்டத்தின் மகத்துவம் மற்றும் நீதியைத் தடுப்பது தொடா்புடையதாகும்’ என்றாா்.

ஆதாரங்களை அளித்த வழக்கானது, உப்ஹாா் சம்பவ துயரத்தால் பாதிக்கப்பட்டவா்களின் சங்கத்தின் தலைவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் பதிவு செய்யப்பட்டது. தில்லி கிரீன் பாா்க்கில் உள்ள உப்ஹாா் திரையரங்கில் 1997-இல் நிகழ்ந்த தீ விபத்தில் 59 போ் உயிரிழந்தனா். 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.