முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை:வழக்கு விசாரணை விவகாரத்தில்காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டிப்பு

2020-இல் வடகிழக்கு தில்லி வன்முறையின் போது 23 வயது இளைஞா் தேசிய கீதம் பாட வற்புறுத்தப்பட்ட பிறகு, கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பான விசாரணை விவகாரம் தொடா்பாக தில்லி காவல்துறையை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

2020-இல் வடகிழக்கு தில்லி வன்முறையின் போது 23 வயது இளைஞா் தேசிய கீதம் பாட வற்புறுத்தப்பட்ட பிறகு, கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பான விசாரணை விவகாரம் தொடா்பாக தில்லி காவல்துறையை உயா்நீதிமன்றம் கடிந்து கொண்டது. காவல்துறை தாக்கல் செய்த நிலவரஅறிக்கை முக்கியத்துவம் இல்லாத வகையில் இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது.

இது தொடா்பான விவகாரத்தை நீதிபதி முக்தா குப்தா விசாரித்தாா். அப்போது நீதிபதி, ‘ஃபைசான் இறக்கும் முன், போலீஸ் காவலில் வைக்கப்படுவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் அவருக்கு மூன்று காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவருக்கு 20 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயங்கள் எவ்வாறு அதிகரித்தன’ என போலீஸாரிடம் கேள்வி எழுப்பினாா்.

முன்னதாக, தேசிய கீதம் மற்றும் ’வந்தே மாதரம்’ பாட கட்டாயப்படுத்தி ஃபைசான் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோ வைரலானது.

இந்த சம்பவம் தொடா்பாக இறந்த ஃபைசானின் தாய் கிஸ்மதுன், தனது மகனின் மரணம் குறித்து எஸ்ஐடி விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் விருந்தா குரோவா் மற்றும் சௌதிக் பானா்ஜி ஆகியோா் ‘காவல் துறையினா் ஃபைசானை சட்டவிரோதமாக காவலில் வைத்தனா். அவருக்கு முக்கியமான உடல்நலப் பாதுகாப்பும் மறுக்கப்பட்டது. இதன் காரணமாக அவா் பிப்ரவரி 26, 2020-இல் உயிரிழந்தாா்’ என வாதிடப்பட்டது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்களைஅடையாளம் காணும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாகக் கூறியிருந்தனா். இந்த அறிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம், இது முக்கியத்துவம் இல்லாத அறிக்கையாக உள்ளது என கூறியது. மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் நிலவர அறிக்கையை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவாா் என்று கூறிய நீதிபதி, வழக்கு விசாரணை மாா்ச் 15-ஆம் தேதி பட்டியலிடப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.