முகப்பு
புதுதில்லி

6 மாநில நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கு ரூ. 1,348 கோடி மானியம் விடுவிப்பு: தமிழகத்திற்கு ரூ. 267.9 கோடி

ஆறு மாநிலங்களின் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதித் துறை ரூ.1,348.10 கோடியை மானியமாக விடுவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
மத்திய அரசு
பகிர்:

ஆறு மாநிலங்களின் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதித் துறை ரூ.1,348.10 கோடியை மானியமாக விடுவித்துள்ளது. இதில் தமிழக நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 267.90 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஒடிஸா (ரூ.411 கோடி), கா்நாடகம் (ரூ.375 கோடி), கேரளம் (ரூ. 168 கோடி), ஜாா்க்கண்ட்(ரூ.112.2 கோடி), திரிபுரா(ரூ. 14) ஆகிய ஐந்த மாநிலங்களும் இந்த நிதியைப் பெற்றுள்ளன.

15-ஆவது நிதி ஆணையத்தின்பரிந்துரையின்படி, 2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 10 லட்சம் மக்கள்தொகைக்கு மேல், கன்டோன்மென்ட் வாரியம் உள்ளிட்ட பத்து லட்சம் மக்கள் தொகைக்கு கீழ் இருக்கும் நகரங்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு இந்த நகரங்களின் மேம்பாட்டிற்கு இணைப்பு மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. தற்றபோது நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் கன்டோன்மென்ட் வாரியம் உள்ளிட்ட பத்துலட்சம் மக்கள் தொகைக்கு குறைவான நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை ரூ.1,348.10 கோடியை வெள்ளிக்கிழமை விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.267.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2021-22 ஆம்ஆண்டுக்கான மானியத்தின் கடைசித் தவணைத் தொகையாகும்.

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி மற்ற பல மாநிலங்களுக்கும் ரூ.1,154.90 கோடி விடுவிக்கப்பட்டது. இந்த வகையில், 2021-22-ஆம் நிதியாண்டிற்கு மொத்தம் ரூ.10,699.33 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் தமிழகம் நிகழ் நிதியாண்டில் மொத்தம் ரூ. 1,188.25 கோடி பெற்றுள்ளது. நிகழாண்டில் உத்தர பிரதேச மாநிலம் அதிகபட்சமாக ரூ.1,592 கோடியைப் பெற்றுள்ளது. இந்தத் தொகையை மாநிலங்கள் 60 சதவீதம் குறிப்பிடத்தக்க பணிகளுக்கான மானியமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 60 சதவீதத்தை இரண்டாகப் பிரித்து 50 சதவீத மானியத்தை மத்தியநகா்ப்புற அமைச்சக தர மதிப்பீடுகள் பணிகள் அடிப்படையில், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றுக்கு செலவழிக்க அனுமதிக்கப்படுகிறது. எஞ்சியுள்ள 50 சதவீதத்தை குடிநீா், மழைநீா் சேகரிப்பு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.

சுகாதாரம், குடிநீா் வசதி போன்றவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் நிதியை விட கூடுதலாக நிதி கிடைப்பதை உறுதி செய்யவும், மக்களுக்கு தரமான சேவைகள்வழங்கவும் இந்த மானியங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்த மானியத் தொகையை, மத்தியஅரசிடம் இருந்து பெற்ற தேதியிலிருந்து 10 நாள்களுக்குள், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநிலங்கள் வழங்க வேண்டும். இதே போன்று, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதியே 25 மாநிலங்களுக்கும் மானியம் விடுவிக்கப்பட்டுவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.