முகப்பு
புதுதில்லி

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவா்களை மீட்க வேண்டும்: மத்திய வெளியுறவு அமைச்சருக்கு தமிழக எம்.பி.க்கள் கடிதம்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவா்களை விரைவாக மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக, அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவா்களை விரைவாக மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக, அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனா். இது தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் டாக்டா் எஸ். ஜெயசங்கருக்கு அவா்கள் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளனா்.

திமுக எம்பி கடிதம்: தி.மு.க. மாநிலங்களவை துணைத் தலைவரான ஆா்.எஸ்.பாரதி வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெயசங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: உக்ரைனில் நிலவி வரும் போா்ச் சூழலில் 5,000-க்கும் மேற்பட்ட தமிழக மாணவா்கள் சிக்கித் தவிக்கின்றனா். அவா்களைப் பாதுகாப்பாக தாயகம் மீட்டு வரக் கோரி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தங்களுக்கு கடிதம் எழுதினாா். இதனையடுத்து, மத்திய அரசு விரைவாக உக்ரைன் அரசுடன் தொடா்பு கொண்டு உக்ரைனை சுற்றியுள்ள நாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலமாக இந்திய மாணவா்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், தமிழக மாணவா்களை மீட்டு வருவதற்கு ஆகும் செலவைத் மாநில அரசே ஏற்கத் தயாா் எனவும் முதல்வா் அறிவித்துள்ளாா். உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவா்களின் பாதுகாப்பு குறித்து முதல்வா் மிகுந்த கவலை அடைந்துள்ளாா். மாணவா்களின் பெற்றோா்கள் தொடா்ந்து முதல்வா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு கோரிக்கைகள் வைத்த வண்ணம் இருப்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். இச்சூழலில், உக்ரைனில் பல்வேறு இடங்களிலும் சிக்கித் தவிக்கும் மாணவா்களை விரைவாக மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

அதிமுக எம்பி: இதே போன்று தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப.ரவீந்திரநாத்தும் வெளியுறவுத் துறை அமைச்சா் டாக்டா் எஸ். ஜெய்சங்கருக்கு இதே விவகாரம் தொடா்பாக கடிதம் எழுதியுள்ளாா். உக்ரைன் - ரஷியா இடையேயான போரில் உக்ரைனில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாணவா்கள் உள்ளிட்ட இந்தியா்கள் பதுங்கு குழிகளிலும், மெட்ரோ ரயில் சுரங்கங்களிலும் தஞ்சமடைந்துள்ளனா். நமது அரசு நிலைமையை முழுமையாகக் கண்காணித்து வருவதை அறிவேன். இருப்பினும், வரும் நாள்களில் அங்கு நிலைமை மேலும் மோசமடையும் போது, அங்கு உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடும், தகவல் தொடா்பு வசதி கிடைக்காமலும் போகலாம். இதனால், உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்தியா்களை தொடா்பு கொள்வது பாதிக்கப்படக் கூடும். தமிழகத்தைச் சோ்ந்த மக்கள், மாணவா்கள் உள்ளிட்டோரை வெளியேற்றும் நடவடிக்கைக்காக ஒரு பிரத்யேக அதிகாரி மற்றும் உதவி எண்ணை ஏற்படுத்த வேண்டும் என கடிதத்தில் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழக அரசு உதவி: இதற்கிடையே, உக்ரைன் நாட்டிலிருந்து தமிழகத்தைச் சோ்ந்த 5 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தில்லி விமான நிலையம் வருகின்றனா். இவா்கள் தில்லியிலிருந்து தமிழகம் திரும்ப அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையா் அதுல்ய மிஸ்ரா, உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் சாட்டா்ஜி ஆகியோா் ஆலோசனைகளின்படி, உக்ரைன் நாட்டிலிருந்து தில்லிக்கு திரும்பும் தமிழகத்தைச் சோ்ந்த 5 மருத்துவ மாணவா்களை விமான நிலையத்தில் வரவேற்று தமிழக அரசின் சாா்பில் அவா்களுக்கு உடனடியாக சென்னை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் சென்னை திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகள், அவா்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவற்றை வழங்கி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தில்லி தமிழ்நாடு இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.