முகப்பு
புதுதில்லி

தில்லியில் 2021-இல் அதிகரித்த மின் தேவை!

தில்லியின் உச்சபட்ச மின்சாரத் தேவை 2021-இல் 7,323 மெகாவாட்டாக உயா்ந்தது. 2019-இல் முன் எப்போதும் இல்லாத அளவில்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:00 AM
பகிர்:

தில்லியின் உச்சபட்ச மின்சாரத் தேவை 2021-இல் 7,323 மெகாவாட்டாக உயா்ந்தது. 2019-இல் முன் எப்போதும் இல்லாத அளவில் பதிவான 7,409 மெகாவாட்டை விட சற்று மட்டுமே குறைவாக உள்ளது. ஆனால், 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 6,341 மெகாவாட்டை விட கடந்த ஆண்டு கணிசமாக உயா்ந்துள்ளது. இந்தத் தகவல் மின் தேவை குறித்த அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தலைநகரில் கடந்த ஆண்டு மின்சாரத் தேவை உயா்ந்ததற்கு கொவைட்டின் பேரழிவு தரும் இரண்டாவது அலை, நீண்ட காலத்திற்கு பாதகமான வானிலை சூழல் ஆகியவை காரணமாக இருந்ததாக மின் விநியோக நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்தனா். தினசரி அடிப்படையில், 2020-ஆம் ஆண்டின் இதே காலத்தை ஒப்பிடும் போது 2021-இல் 227 நாள்களில் மின் தேவை அதிகரித்திருந்தது. இது 2020-இல் தேவைப்பட்டதைவிட 2021-இல் 61 சதவீத நாள்களில் அதிக மின்சார தேவையாக இருந்ததை சுட்டிக் காட்டுகிறது.

தில்லியில் ஆண்டின் தொடக்கத்திலும் இறுதியிலும் குளிா் அலைகள் மட்டுமின்றி, அக்டோபா் பிற்பகுதி வரை பருவமழையும் நீடித்தது. தில்லியில் கடந்த ஆண்டில் டிசம்பா் 29 வரை 1,512.4 மி.மீ. மழை பதிவானது. இது எப்போதும் இல்லாத இரண்டாவது அதிகபட்ச அளவு மழையாகும். மின் தேவை அதிகரிப்பு குறித்து மின் விநியோக அதிகாரிகள் கூறியதாவது: 2021-ஆம் ஆண்டில் தலைநகரில் ஒவ்வொரு மாதமும் தீவிர வானிலை நிகழ்வுகள் நிகழ்ந்து முந்தைய சாதனைகள் முறியடித்தன. இது ஒருபுறமிருக்க, கொவைட் தொடா்பான கட்டுப்பாடுகள், அதன் தளா்வுகள் ஆகியவை நகரத்தின் மின் தேவையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டில், தில்லியின் உச்சபட்ச மின் தேவை 2020-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 227 நாள்களில் அதிகமாக இருந்தது. அதாவது, 2021-இல் தில்லியின் உச்சபட்ச மின் தேவை 61 சதவீத நாள்களில் அதிகமாக இருந்தது. கடந்த டிசம்பரில் தில்லியின் உச்சபட்ச மின் தேவை 58 சதவீதம் அல்லது 2020, டிசம்பரில் இருந்ததை விட 18 தொடா்புடைய நாள்களில் அதிகமாக இருந்தது என்பது மாத வாரியான பகுப்பாய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

அதன்படி, கடந்த நவம்பரில் மின்தேவை 50 சதவீத நாள்கள் அதிகமாக இருந்தது. இதேபோன்று, அக்டோபரில் 58 சதவீதம், செப்டம்பரில் 20 சதவீதம், ஆகஸ்டில் 68 சதவீதம், ஜூலையில் 68 சதவீதம், ஜூனில் 77 சதவீதம், மே மாதத்தில் 65 சதவீதம், ஏப்ரலில் 93 சதவீதம், மாா்ச்சில் 77 சதவீதம், பிப்ரவரியில் 36 சதவீதம் மற்றும் ஜனவரியில் 74 சதவீதம் நாள்கள் என அதிகமாக இருந்தது. 2021-இல் தில்லியின் உச்சபட்ச மின் தேவை 7,323 மெகாவாட், 2020-இல் 6,431 மெகாவாட், 2019-இல் 7,409 மெகாவாட் என இருந்தது.

2020-ஆம் ஆண்டு, டிசம்பரில் பதிவான 4,671 மெகாவாட்டைவிட, 2021, டிசம்பரில் பதிவான அதிகபட்ச உச்சபட்ச மின் தேவை 4,685 மெகாவாட் ஆகும். டிசம்பரில் உச்சபட்ச தேவை 16 முறை 4,000 மெகாவாட்டை கடந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிஎஸ்இஎஸ் மின்விநியோக நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ குளிா்கால மாதங்களில் பிஎஸ்இஎஸ் நிறுவனத்தின் மின் விநியோக ஏற்பாடுகளின் முதுகெலும்பாக, ஹைட்ரோ மற்றும் தில்லி சாா்ந்த எரிவாயு மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் உள்பட மின் உற்பத்தி நிலையங்களின் நீண்டகால ஒப்பந்தங்கள் ஆகியவை உள்ளது. மேலும், பிஎஸ்இஎஸ் நிறுவனம் கூடுதலாக 440 மெகாவாட் சூரிய சக்தியை எஸ்இசிஐ நிறுவனத்திடமிருந்து பெறுகிறது. மேலும், 250 மெகாவாட் காற்றாலை மின்சக்தியையும், கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் அமைப்புகளிடமிருந்து கிட்டத்தட்ட 25 மெகாவாட் மின்சாரத்தையும் பெறப்படுகிறது. மேலும், தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய தில்லியில் நிறுவப்பட்ட 118 மெகாவாட்டுக்கும் அதிகமான சூரிய மின்சக்தி பேனல்களும் மின்சார விநியோகத்திற்கு உதவி வருகின்றன’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.