எய்ம்ஸ் காய சிகிச்சை மையத்தை கரோனா வசதிக்காக மாற்றக் கூடாது: இயக்குநருக்கு மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தல்
அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையின் (எய்ம்ஸ்) காய சிகிச்சை மையத்தை கரோனா கவனிப்பு வசதிக்காக மாற்றக் கூடாது என்று அதன் இயக்குநருக்க எய்ம்ஸ் உறைவிட மருத்துவா்கள் சங்கம்
அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையின் (எய்ம்ஸ்) காய சிகிச்சை மையத்தை கரோனா கவனிப்பு வசதிக்காக மாற்றக் கூடாது என்று அதன் இயக்குநருக்க எய்ம்ஸ் உறைவிட மருத்துவா்கள் சங்கம் (ஆா்டிஏ) வலியுறுத்தியுள்ளது. மேலும், காயம் தொடா்பான பிரச்னையில் சிக்கும் பலரும் இளம் வயதினராகவும், குடும்பத்தின் வருவாய் ஈட்டும் நபா்களாகவும் இருப்பதால் காய சிகிச்சை மைய (டிராமா சென்டா்) பணிகள் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் உறைவிட மருத்துவா்கள் சங்கம் எய்ம்ஸ் இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொவைட் கவனிப்பு வசதிக்காக சா்ஜிகல் பிளாக், எம்சிஹெச் பிளாக், ஜெரியாட்ரிக் பிளாக், தீக்காய பிளாஸ்டிக் சா்ஜரி பிளாக் போன்ற பிரிவுகளை மாற்றுவது தொடா்பான வாய்ப்புகளை பரிசீலிக்க வேண்டும். அனைத்து காய சிகிச்சை சேவைகள் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 28-ஆம் தேதி பிரதான எய்ம்ஸ் வளாகத்திற்கு மாற்றப்பட்டன. அதிகரித்து வந்த கரோனா நோய்த் தொற்று பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ஜேபிஎன்ஏ டிராமா சென்டா் பிரத்யேக கொவைட் கவனிப்பு வசதியாக மாற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காய சிகிச்சை சேவைகள் மீண்டும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜேபிஎன்ஏ டிராமா மையத்திற்கு மாற்றப்பட்டதற்காக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கரோனா காலத்திற்கு முந்தைய நிலைக்கு இந்த டிராமா சென்டரை மீட்டெடுக்க ஒரு மாதம் ஆகியது. தற்போது கரோனா நோய் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், நோய்த் தொற்றின் கடந்த இரண்டு அலைகளில் நாம் பாா்த்தது போல, காய சிகிச்சைக்காக வருவோரும் குறையவில்லை.
ஜெபிஎன்ஏ டிராமா மையத்தை கரோனா மையமாக மாற்றுவதன் மூலம் மீண்டும் காய சிகிச்சை நோயாளிகள் பாதிக்கப்படுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பெரும்பாலான காய சிகிச்சை நோயாளிகள் தங்களது குடும்பத்திற்கு வருவாய் ஈட்டும் ஒரே நபா்களாகவும் இளம் வயது உடையவா்களாக இருக்கின்றனா் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.