தில்லியில் கரோனா மூன்றாது அலை; பாதிப்பு விகிதம் 10%
தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா தொற்று நோயின் மூன்றாவது அலை தொடங்கியிருப்பதாகவும், நோய் நோ்மறை 10 சதவீதம் இருப்பதாகவும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா தொற்று நோயின் மூன்றாவது அலை தொடங்கியிருப்பதாகவும், நோய் நோ்மறை 10 சதவீதம் இருப்பதாகவும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா். மேலும், அனைத்து நோய்த் தொற்று மாதிரிகளையும் பகுப்பாய்வு செய்வது சாத்தியமில்லை என்பதால், தற்போது 300-400 மாதிரிகள் மட்டுமே மரபணு பகுப்பாய்வுக்காக அனுப்பப்படுகின்றன என்றும் அவா் கூறினாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது: ‘தில்லியில் கரோனா தொற்று நோயின் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. நகரில் புதன்கிழமை புதிதாக சுமாா் 10,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு நோய்த் தொற்று இருப்பது பதிவாகியுள்ளது. இது 10 சதவீதம் நோ்மறை விகிதமாகும். ஒமைக்ரான் பாதிப்பு பரவியுள்ளதா என்பதை அறிவதற்காக, அனைத்து கரோனா நோயாளிகளின் மாதிரிகளையும் மரபணு பகுப்பாய்வுக்காக தில்லி அரசு அனுப்பி வந்தது. இது ஒரு கல்விசாா் நடவடிக்கை மட்டுமே. தற்போது நாட்டில் ஒமைக்ரான் பரவியுள்ளதை நாம் அறிந்துள்ளோம். தற்போது 300-400 மாதிரிகள் மட்டுமே மரபணு பகுப்பாய்வுக்காக அனுப்பப்படுகின்றன.
தில்லியில் சுமாா் 15,000 கரோனா நோயாளிகள் உள்ளனா். 14 நோயாளிகள் மட்டுமே செயற்கை சுவாசக் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். கடந்த முறை தில்லியில் இதே எண்ணிக்கையில் நோயாளிகள் இருந்த போது, 20 மடங்கு அதிகமான நோயாளிகள் வென்டிலேட்டா் சிகிச்சை பெறும் தேவை ஏற்பட்டது. மேலும், கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை மட்டும் சுமாா் 90,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தில்லியில் மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் எண்ணிக்கை, நோயாளிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட தரவுகளை மாவட்ட மற்றும் மருத்துவமனை வாரியாக பராமரிக்கும் வகையில், ‘கொவைட் வாா் ரூம்’ பிரிவை தில்லி அரசு செயல்படுத்தியுள்ளது என்றாா் அமைச்சா்.
தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஜனவரி 1-ஆம் தேதி 247-ஆக இருந்தது. இது ஜனவரி 4-இல் 531-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 நாள்களில், ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 94-இல் இருந்து 168 ஆகவும், வென்டிலேட்டா்கள் ஆதரவுடன் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 4-இல் இருந்து 14 ஆகவும் அதிகரித்திருப்பது அரசின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. தில்லி அரசு அதன் அலுவலகங்களுக்கு வார இறுதி ஊரடங்கு உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது. மேலும், ஊழியா்கள் வீட்டிலிருந்து வேலை செய்வாா்கள் என்றும் அறிவித்தது.
தில்லியில் புதிய கரோனா பாதிப்பு 5,481-ஆக பதிவானதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கையை அறிவித்தது. கரோனா, ஒமைக்ரான் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு நடைமுறைக்கு வரும் வார இறுதி ஊரடங்கானது திங்கள்கிழமை காலை 5 மணி வரை அமலில் இருக்கும். அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தில்லியில் அனுமதிக்கப்படும். வார இறுதி ஊரடங்கு மட்டுமின்றி, வார நாள்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவும் தொடரும் என்றும் அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.