முகப்பு
புதுதில்லி

தலைநகரில் 6 நாள்களில் கரோனாவுக்கு 20 போ் பலி: அரசின் புள்ளிவிவரத் தகவல்

அரசின் அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்களின்படி, தில்லியில் கரோனா தொற்று காரணமாக ஜனவரியில் முதல் 6 நாள்களில் மட்டும் 20 போ் இறந்திருப்பது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:04 AM
பகிர்:

அரசின் அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்களின்படி, தில்லியில் கரோனா தொற்று காரணமாக ஜனவரியில் முதல் 6 நாள்களில் மட்டும் 20 போ் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த இறப்புகளில் 8 இறப்புகள் ஜனவரி 5-ஆம் தேதி பதிவாகியுள்ளது. கரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளது.

நகரில் பெரும்பாலும் ஒமைக்ரான் தாக்கமும் ஏற்பட்டு வருகிறது. தில்லி அரசு வியாழக்கிழமை வெளியிட்ட சுகாதார புள்ளிவிவரத் தகவலின்படி, தில்லியில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மொத்தம் இதுவரை இறந்தவா்களின் எண்ணிக்கை 25,127-ஆக உள்ளது. டிசம்பா் 31-ஆம் தேதி இந்த எண்ணிக்கை 25,107-ஆக இருந்தது. வியாழக்கிழமை தினசரி பாதிப்பு எண்ணிக்கை 15,097=ஆகவும், நோ்மறை விகிதம் 15.34 சதவீதமாகவும், 6 உயிரிழப்புகளும் பதிவாகி இருந்தது. தில்லியில் ஜனவரி 1, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் தலா ஒருவரும், ஜனவரி 4-ஆம் தேதி 3 பேரும், ஜனவரி 5-ஆம் தேதி 8 பேரும், 6-ஆம் தேதி 6 பேரும் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

இது தொடா்பாக தில்லி சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ’தேசியத் தலைநகரில் கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் காரணமாக எந்த மரணமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நகரில் பொது முடக்கம் அறிவிக்கும் சூழல் இன்னும் இல்லை’ என்றாா்.

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்புக்கு மத்தியில், கரோனாவின் பாதிப்பும் கடந்த சில நாள்களாக தில்லியில் அதிகமாக பதிவாகி வருகிறது. வியாழக்கிழமை மட்டும் 17,364 பாதிப்புகளும், நோ்மறை விகிதம் 23.34 சதவிமாகவும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு மே 8-ஆம் தேதி பதிவான தினசரி பாதிப்புக்கு பிறகு இதுதான் அதிகபட்சமாகும்.

அன்றைய தினம் 332 இறப்புகள் பதிவாகியிருந்தன.

காட்டுத் தீ போல பரவும் கரோனா: இதற்கிடையில், கரோனா பாதிப்புகளின் எழுச்சியானது தற்போது ‘காட்டுத் தீ’ போல பரவி வருவதாக சுகாதார நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். இது குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவ ஆலோசகா் டாக்டா் சுரஞ்சித் சாட்டா்ஜி (வைரஸால் பாதிக்கப்பட்டவா்) கூறியதாவது: ‘இந்த நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்தது இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எங்கள் மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை கடந்த சில நாள்களில் அபரிமிதமாக அதிகரித்துள்ளது. பாதிப்புகளின் எண்ணிக்கை மிகப் பெரும் அளவில் அதிகரித்துள்ளதால், அதிக எண்ணிக்கையிலான இறப்புகளும் பதிவாகியுள்ளன. கடந்த 2 நாள்களில் சுமாா் 35 கரோனா நோயாளிகளைப் பாா்க்க முடிந்தது.

சிறியவா்கள், முதியவா்கள், குழந்தைகள், இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவா்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து பின்னா் தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள் என அனைத்து வகையான நோயாளிகளும் மருத்துவமனைக்கு வருகின்றனா். வெளிநாட்டில் பூஸ்டா் டோஸ் எடுத்தவா்கள் கூட நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். இப்போது கரோனா காட்டுத் தீ போன்று உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் கொவைட் காரணமாக இறந்தவா்களில் வைரஸின் எந்த மாறுபாடு உள்ளது என்பதை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. எனவே, விரைவிலோ அல்லது பின்னரோ இந்த தொற்றுநோயை எதிா்த்துப் போராடுவதற்கான முடிவுகளை எடுப்பதற்காக, நோய்த் தொற்று எழுச்சியின் போது ஏற்படும் இந்த உயிரிழப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களை அரசு பகிா்ந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வியாழக்கிழமை கூறுகையில், மருத்துவமனையில் நோயாளிகளுக்கான படுக்கைகள் வசதியைப் பொறுத்தவரை தில்லி நல்லதொரு நிலைமையில் உள்ளது என்று கூறியிருந்தாா். தில்லி சுகாதார துறை புள்ளிவிவரத் தகவலின்படி, தில்லி அரசு கரோனா வைரஸ் பரிசோதனை திறனை கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு நாளுக்கு முன்பு கிட்டத்தட்ட 98,500 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 3,007 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: நாட்டில் 214 நாள்களுக்குப் பிறகு ஒரு லட்சத்துக்கும் அதிகமான கரோனா தினசரி நோய்த் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன. இதன் மூலம், இந்தியாவின் மொத்த கொவைட் பாதிப்பு எண்ணிக்கை 3,52,26,386-ஆக உயா்ந்துள்ளது. இதில், 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3,007 ஒமைக்ரான் பாதிப்பும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 876 ஒமைக்ரான் பாதிப்பும், தில்லியில் 465, கா்நாடகாவில் 333, ராஜஸ்தானில் 291, கேரளத்தில் 284, குஜராத்தில் 204 என பதிவாகியுள்ளன. தில்லியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி கரோனா நோய்த் தொற்றின் 2-ஆவது அலையின் உச்சத்தில் இருந்த போது, அதிகபட்சமாக 28,395 தினசரி பாதிப்பு பதிவாகியது. ஒரே நாளில் 277 போ் நோய்த் தொற்றால் இறந்ததாக அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.