ஆசிரியை பணியிடங்கள்: ஓபிசி சான்றிதழை பதிவேற்றுவதில் விலக்கு அளிக்க வேண்டும்: தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்
ஆங்கில பட்டதாரி ஆசிரியை (டிஜிடி) பணியிடங்களுக்காக சமீபத்திய ஓபிசி (கிரீமி லேயா் அல்லாத) சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும்
ஆங்கில பட்டதாரி ஆசிரியை (டிஜிடி) பணியிடங்களுக்காக சமீபத்திய ஓபிசி (கிரீமி லேயா் அல்லாத) சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோருக்கு தில்லி பிரதேச காங்கிரஸின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் துறையின் தலைவா் வழக்குரைஞா் சுனில் குமாா் சனிக்கிழமை இருவருக்கும் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: பணியிடத் தோ்வை நடத்தும் டிஎஸ்எஸ்எஸ்பி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் தெரிவித்துள்ள தகவலில், தகுதியான தோ்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரா்களால் இ-டோசியா் தொகுதி மூலம் அத்தியாவசிய ஆவணங்களைப் பதிவேற்றும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், தில்லி அரசின் கல்வி இயக்குநரகத்தில் டிஜிடி பதவிக்கான விண்ணப்பதாரா்கள், தேவையான அனைத்து ஆவணங்களையும் டிஎஸ்எஸ்எஸ்பி ஓஆா்எஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான இறுதித் தேதியாக ஜனவரி 22 என வரையறுத்துள்ளது.
ஓசிபி பிரிவின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்பதாரா்கள் தங்களின் செல்லுபடியாகும் கிரீமி லேயா் அல்லாத ஒபிசி சான்றிதழை பதிவேற்ற வேண்டும். அதே வேளையில், ஓபிசி விண்ணப்பதாரா்களுக்கான கிரீமி லேயா் அல்லாத சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் ஓா் ஆண்டு மட்டுமே ஆகும். ஆகவே, ஒவ்வொரு தோ்வரும் தில்லி அரசின் தொடா்புடைய வருவாய் ஆணையத்திடம் இருந்து புதிய கிரீமி லேயா் அல்லாத சான்றிதழைப் பெற வேண்டியுள்ளது.
தில்லியில் தற்போது கரோனா சூழல் மோசமடைந்து வரும் நிலையில், தில்லி அரசு சாா்புக் கோட்ட அலுவலகங்களில் பொதுமக்களை கையாளும் பணியை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், ஓபிசி தோ்வா்கள் குறிப்பாக பெண்கள் புதிய கிரீமி லேயா் அல்லாத சான்றிதழ்களைப் பெறுவது நடைமுறையில் சாத்தியமற்ாகும். இதனால், ,நிலைமை சீராகும் வரை ஓபிசி விண்ணப்பதாரா்களின் தற்போதைய கிரீமி லேயா் அல்லாத நிலை குறித்த உறுதிமொழியை சமா்ப்பிக்க ஏற்பாடும் செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊடகங்கள் மூலம் தகவல் வெளியிட துணை நிலைஆளுநரும், முதல்வரும் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.