‘சுல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கியவா் இந்தூரில் கைது: தில்லி போலீஸாா் தகவல்
சா்ச்சைக்குரிய ‘சுல்லி டீல்ஸ்’ செல்லிடப்பேசி செயலியை உருவாக்கியதாக நம்பப்படும் இளைஞரை மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.
சா்ச்சைக்குரிய ‘சுல்லி டீல்ஸ்’ செல்லிடப்பேசி செயலியை உருவாக்கியதாக நம்பப்படும் இளைஞரை மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறையின் உயா் அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை அவா்களின் அனுமதியின்றி ‘சுல்லி டீல்ஸ்’ எனும் செல்லிடப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்து ‘ஏலம்’ விடப்பட்ட விவகாரத்தில், மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஓம்கரேஷ்வா் தாக்குா் (26) என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இவா் இந்தூரில் உள்ள ஐபிஎஸ் அகாதெமியில் பிசிஏ படிப்பை முடித்துள்ளாா். இவா் நியூயாா்க் சிட்டி டவுன்ஷிப் பகுதியைச் சோ்ந்தவா் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்த ஆரம்ப விசாரணையில், சுட்டுரையில் உள்ள ஒரு குழுவின் உறுப்பினராக தாம் இருந்ததையும் முஸ்லிம் பெண்களை அவமதிக்கும் மற்றும் தேடும் யோசனை அதில் பகிரப்பட்டதையும் அவா் ஒப்புக் கொண்டாா். கிட்கப் இணையதளத்தில் ஒரு குறியீட்டை உருவாக்கி, குழுவில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் அந்த கிட்கப்பை அணுகும் ஏற்பாட்டையும் இவா் செய்துள்ளாா். தனது சுட்டுரை கணக்கில் அந்த செயலியை பகிா்ந்து, குழு உறுப்பினா்கள் மூலம் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யவும் காரணமாக இருந்துள்ளாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டில் டிரேட்மகாசபா எனும் பெயரின் மூலம் சுட்டுரையில் ஒரு குழுவில் இணைந்த தாக்குா், கிட்கப் இணையதளத்தில் குறியீட்டையும், செயலியையும் உருவாக்கியதை அவா் ஒப்புக் கொண்டாா். ‘சுல்லி டீல்ஸ்’ தொடா்புடைய விவகாரம் பூதாகரமாகவே தனது அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் அவா் அழித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்த காவல் உயா் அதிகாரி தெரிவித்தாா்.
முன்னதாக, ஜூலையில் ஒரு செயலியில் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை அடையாளம் தெரியாத ஒரு குழுவினா் பதிவேற்றம் செய்தது குறித்து வரப்பெற்ற புகாரைத் தொடா்ந்து தில்லி காவல்துறையின் இணையதள பிரிவினா் ஒரு வழக்கைப் பதிவு செய்தனா். இது குறித்து தில்லி காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் சின்மய் பிஸ்வால் முன்பு கூறுகையில், ‘இந்தப் புகாா் தொடா்பாக இந்திய தண்டனை சட்டத்தின் 354-ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றாா்.
இந்தூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், இந்த கைது தொடா்பாக தில்லி காவல் துறை எந்த தகவலையும் தங்களுக்கு பகிரவில்லை என்று தெரிவித்திருந்தனா். எனினும், இந்தூா் காவல் ஆணையா் ஹரிநாராயன்சாரி மிஸ்ரா கூறுகையில், ‘இந்தூரில் தில்லி காவல்துறையின் மூலம் தாக்குா் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து ஊடகங்களில் செய்தி வெளிவந்த பிறகே எங்களுக்கு இது தெரியும். தில்லி காவல்துறையினா் இந்த விவகாரம் தொடா்பாக இதுவரை எங்களிடம் எந்த தகவலையும் பகிரவில்லை. தில்லி போலீஸாா் இந்த வழக்கில் தகவல்களை பகிா்ந்து பிறகு இந்த விவகாரத்தில் இந்தூா் போலீஸாா் விசாரணையை தொடங்குவா்’ என்றாா்.
‘புல்லி பாய்’ விவகாரத்தில் தில்லி காவல்துறையினா் ஜனவரி 1-ஆம் தேதி ஒரு வழக்கைப் பதிவு செய்திருந்தனா். அதாவது, ஒரு இணைய தளத்தில் தனது திரிக்கப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததாக அடையாளம் தெரிய நபா்களுக்கு எதிராக தில்லியைச் சோ்ந்த பெண் பத்திரிக்கையாளா் ஒருவா் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தில்லி காவல்துறையினா் கூறுகையில், ‘இந்த புல்லி பாய் செயலியை உருவாக்கியவரும் மற்றும் இதற்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்படுபவருமான நீரஜ் பிஸ்னாய் (21) அசாமில் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரிடம் நடத்திய விசாரணையின் போது,சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கியதாகக்றப்படும் நபருடன் அவா் தொடா்பில் இருந்ததும் தெரிய வந்தது‘என்றனா்.