பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெறுமா?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறுமா என்பது குறித்து...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. அணியில் இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றபோதிலும், மோசமாக தோல்வியடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவாக உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான மோசமான தோல்விக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாளை (ஏப்ரல் 3) சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Advertisement
Advertisement
அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் போட்டிகள் சில சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்றது. ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு உகந்தவையாக இருந்ததால், ஐபிஎல் போட்டிகளிலும் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இளம் வீரர்கள் அடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிக் கணக்கை தொடங்க வேண்டும் என்பதே அந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பு. முதல் போட்டியில் சோபிக்கத் தவறிய சஞ்சு சாம்சன் நாளை நடைபெறும் போட்டியில் பெரிய அளவில் ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்கும் பட்சத்தில், அடுத்தடுத்து களமிறங்கும் இளம் வீரர்கள் எந்த ஒரு அழுத்தமுமின்றி அவர்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவிப்பார்கள். கடந்த சீசனில் கலக்கிய ஆயுஷ் மாத்ரே மற்றும் ஏலத்தின் மூலம் புதிதாக அணியில் இணைந்துள்ள பிராசந்த் வீர், கார்த்திக் சர்மா சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிக்க வேண்டும்.
காயம் காரணமாக டெவால்ட் பிரேவிஸ் முதல் போட்டியில் விளையாடவில்லை. சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது. அணியில் எம்.எஸ்.தோனி இல்லாததும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சர்ஃபராஸ் கானும், பின் வரிசையில் களமிறங்கிய ஜேமி ஓவர்டனும் ஓரளவுக்கு நன்றாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஆனால், அணியின் வெற்றிக்கு அது போதுமானதாக இல்லை.
பந்துவீச்சை பொருத்தவரையில், மாட் ஹென்றி மற்றும் நூர் அகமதின் பந்துவீச்சு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக எடுபடவில்லை. அவர்களது பந்துவீச்சை இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிகவும் எளிதாக விளையாடினார். பந்துவீச்சிலும் சிஎஸ்கே கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ், அதன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியுள்ளது. தொடரை வெற்றியுடன் தொடங்கிய உத்வேகத்தில் அந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது.
இளம் வீரர்கள் அடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் கோட்டையாகத் திகழும் சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Following the crushing defeat suffered in their opening match against the Rajasthan Royals, the question remains whether CSK will emerge victorious in their second match against the Punjab Kings.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.