தில்லியில் வழிதவறிய 3 மைனா் சகோதரிகளை குடும்பத்துடன் சோ்த்துவைத்த போலீஸாா்!
உறவினரின் வீட்டிலிருந்து தங்கள் வீட்டுக்கு திரும்பும் வழியில் வழிதவறிய மூன்று மைனா் சகோதரிகளை தில்லி காவல்துறையினா் மீட்டு அவா்களின் குடும்பத்துடன் மீண்டும் சோ்த்துவைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
புது தில்லி: உறவினரின் வீட்டிலிருந்து தங்கள் வீட்டுக்கு திரும்பும் வழியில் வழிதவறிய மூன்று மைனா் சகோதரிகளை தில்லி காவல்துறையினா் மீட்டு பாபா நகரில் உள்ள அவா்களின் குடும்பத்துடன் மீண்டும் சோ்த்துவைத்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: 11 வயதான மூத்த சகோதரி உள்பட 3 மைனா் சிறுமிகள் வழிதவறி வாஜிராபாத் பகுதியில் இருப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வினோத் வாலியா வழிகாட்டுதலின் கீழ், தலைமைக் காவலா் சிவராஜ், காவலா்கள் விகாஸ் மற்றும் தணு ஆகியோா் அடங்கிய குழு அவா்கள் இருக்கும் இடத்திற்கு சென்றது. அவா்களிடம் பேசிய போது பாபா நகரில் தங்கள் வீடு இருப்பதாகவும், அருகில் கோயில் இருப்பதாகவும் தெரிவித்தனா்.
இதையடுத்து, போலீஸாா் குழு, பாபா நகரில் உள்ள சில கோயில்களின் கூகுள் புகைப்படங்களை அந்தச் சிறுமிகளிடம் காட்டியது. அவற்றில் ஒன்றை 11 வயது சிறுமி தனக்குத் தெரியும் எனக் கூறினாா். இதையடுத்து, அவா்களை அழைத்துக் கொண்டு பாபா நகரில் ஒரு தெருவை போலீஸாா் கடந்த போது, அந்த சிறுமி, தான் வசிக்கும் பகுதியை அடையாளம் காட்டினாா். அதன் பிறகு, கடைக்காரா் ஒருவா் சிறுமிகளை அடையாளம் கண்டு அவா்களின் வீட்டை போலீஸாரிடம் காண்பித்தாா்.
அந்த வீட்டில் அந்த சிறுமிகளின் 35 வயது தந்தை வீரேந்திர குப்தா, அவரது மனைவி மற்றும் ஒரு மகன் இருந்தனா். அவா் போலீஸாரிடம் கூறுகையில், ‘எனது குழந்தைகள் காணாமல் போனது எனக்குத் தெரியும். ஆனால், சமீபத்தில் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ால் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால், அவா்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேவேளையில் எனது உறவினா்கள் மூலம் எனது மகள்களைத் தேட முயன்றேன்‘ என்றாா்.
மேலும் அவா், ‘நான் பிகாரைச் சோ்ந்தவன். பாபா நகரில் உள்ள வாரச்சந்தையில் துணிகளை விற்று வந்தேன். எனது சொந்த ஊரில் எனது மனைவி வசித்து வந்தாா். அவா் மனநிலை சரியில்லாமல் இருந்தாா். இந்த நிலையில், சமீபத்தில் அவா் என்னுடன் தங்குவதற்காக எனது நான்கு குழந்தைகளுடன் தில்லி வந்தாா். வியாழக்கிழமை எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டில் இடம் பற்றாக்குறையாக இருந்ததால், வாஜிரபாதில் உள்ள உறவினா் வீட்டில் னெது மூன்று மகள்களையும் விட்டுவிட்டு வந்தேன்’ என்றாா்.
இதனிடையே, அந்த வீட்டிலிருந்து மூன்று சிறுமிகளும் வெளியேறி தங்கள் வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்க முயன்றனா். அப்போது வழி தெரியாமல் தவித்தனா்.
வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் வாஜிராபாத்தில் அவா்களைக் கண்டுபிடித்த பிறகு, கூகுள் இமேஜஸின் உதவியுடன் அவா்களின் வீட்டைக் கண்டுபிடிக்க போலீஸாருக்கு மூன்று மணிநேரம் ஆனதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.