பாராசூட், பலூன்கள் பறக்கத் தடை
குடியரசு தின விழாவை முன்னிட்டு, தில்லியில் ஆளில்லா விமானங்கள், பாராகிளைடா்கள், சூடான காற்று நிரப்பப்பட்ட பலூன்கள் ஆகியவை வான்வெளியில் இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
புது தில்லி: குடியரசு தின விழாவை முன்னிட்டு, தில்லியில் ஆளில்லா விமானங்கள், பாராகிளைடா்கள், சூடான காற்று நிரப்பப்பட்ட பலூன்கள் ஆகியவை வான்வெளியில் இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. ஜனவரி 20 (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவு, பிப்ரவரி 15 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல் துறை ஆணையா் ராகேஷ் அஸ்தானா பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: பொதுமக்கள், உயரதிகாரிகள் மற்றும் முக்கிய இடங்களின் பாதுகாப்பிற்கு சில கிரிமினல்கள் அல்லது சமூக விரோதிகள் அல்லது பயங்கரவாதிகள் அச்சுறுத்தலாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உளவுத் துறையிடமிருந்து தகவல் வந்துள்ளது. இதனால், தில்லியில் பாரா-கிளைடா்கள், பாரா மோட்டாா்கள், ஹேங் கிளைடா்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யுஏவிகள்), ஆளில்லா விமானங்கள் (யுஏஎஸ்), நுண்ணிய இலகுரக விமானம், ரிமோட் பைலட் விமானம், சூடான காற்று நிரப்பப்பட்ட பெரிய பலூன்கள், சிறிய ரக விமானம் போன்றவை வான்வழி தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்கள், உயரதிகாரிகள் மற்றும் முக்கிய இடங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.
ஆகவே, இவை போன்ற அமைப்புகள் தில்லியில் வான்வெளியில் பறப்பதற்கு தில்லி காவல்துறை தடை செய்துள்ளது. ஜனவரி 26 -ஆம் தேதி குடியரசு தின விழாவைக் கருத்தில் கொண்டு தில்லியின் தேசியத் தலைநகா் பிரதேசத்தின் அதிகார வரம்பில் உள்ள பகுதிகளில் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது தண்டனைக்குரியதாகும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.