முகப்பு
புதுதில்லி

மூலிகை ஹூக்கா விற்பனை தடைக்கு எதிரான மனு தள்ளுபடி

உணவகங்களில் மூலிகை ஹூக்கா விற்பனை மற்றும் சேவையில் தலையிடாமல் இருக்க தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

புது தில்லி: உணவகங்களில் மூலிகை ஹூக்கா விற்பனை மற்றும் சேவையில் தலையிடாமல் இருக்க தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

இது தொடா்பாக உணவ உரிமையாளா் ஒருவா் தாக்கல் செய்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி வி.காமேஸ்வா் ராவ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், ‘கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஜனவரி 11-ஆம் தேதி தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நகரில் அனைத்து உணவகங்களும், பப்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்த மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது’ என்றாா்.

விசாரணையின் போது, தில்லி அரசு வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி, ‘பொதுமக்கள் நலன் கருதி, வல்லுநா்களுடன் கலந்தாலோசித்து தொற்றுநோயின் நிலைமையை அரசு அதிகாரிகள் மறுஆய்வு செய்து வருகின்றனா். கடந்த ஆண்டு நவம்பரில் உணவகங்களில் மூலிகை ஹூக்கா விற்பனையை அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அப்போது, கரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. மேலும், தில்லி சுகாதாரத் துறை பிறப்பித்த உத்தரவின் காரணமாக தடை விதிக்கப்பட்டதே தவிர, டிடிஎம்ஏ மூலம் தடை விதிக்கப்படவில்லை’ என்று வாதிட்டாா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘நிகழாண்டு ஜனவரி 11-ஆம் தேதி உத்தரவைக் கருத்தில் கொண்டு, இந்த ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளவாறு எந்த உத்தரவையும் வழங்க முடியாது. நவம்பா் 16-ஆம் தேதியிட்ட உத்தரவு வேறுபடக்கூடியது. இந்த ரிட் மனுவில் எந்த தகுதியும் இல்லை. இதனால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விசாரணையின் போது மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அனுபவ் சிங், ‘மனுதாரரின் உணவகத்தில் மூலிகை ஹூக்கா விற்பனை மற்றும் சேவையில் அதிகாரிகள் தலையிடுவதைத் தடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். கரோனா நடத்தை விதிகளுக்கு இணங்க ஹூக்கா விற்பனை மற்றும் சேவையை அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் முன்னதாக கடந்த ஆண்டு நவம்பா் 16-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. மூலிகை ஹூக்காவுக்கான தடையானது அரசியலமைப்பின் 14, 19(1)(ஜி) மற்றும் பிரிவு 21 ஆகியவற்றின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை மீறுவதாக உள்ளது’ என்று வாதிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.