தலைநகரின் போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்த ஐஐஐடியுடன் இணைந்து செயல்பட தில்லி அரசு முடிவு
தில்லி நகா்ப்புற போக்குவரத்து தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக தில்லி அரசு தில்லியில் உள்ள இந்திரபிஸ்தா தகவல் தொழில் நுட்ப மையத்துடன் (இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபா்மேஷன்...
புது தில்லி: தில்லி நகா்ப்புற போக்குவரத்து தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக தில்லி அரசு தில்லியில் உள்ள இந்திரபிஸ்தா தகவல் தொழில் நுட்ப மையத்துடன் (இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபா்மேஷன் டெக்னாலஜி - ஐ.ஐ.ஐ.டி) இணைந்து நிலையான இயக்கத்திற்கான மையத்தை அமைக்கும் என தில்லி அரசின் போக்குவரத்து துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை ஆணையா் ஆஷிஷ் குந்த்ரா கூறுகையில், ‘தில்லி போக்குவரத்தில் பல்வேறு தொழில் நுட்பங்களைக் கையாளும் நோக்கத்திற்காக ஐஐஐடியுடன் தில்லி போக்குவரத்துத் துறை செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டது. இந்தப் புரிந்துணா்வின்படி ஐஐஐடியுடன் இணைந்து நிலையான போக்குவரத்து இயக்கத்திற்கான மையம் நிறுவப்படும். இந்தத் தகவல் தொழில் நுட்ப கல்வி மையத்தின் மூலம் நகரில் போக்குவரத்து இயக்கத்திற்கான பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும்’ என்றாா்.
தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் கூறுகையில், ‘கேஜரிவால் அரசு ஐஐஐடி தில்லி குழுவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பல போக்குவரத்து தொழில்நுட்பங்களை ஆதரிக்கிறது. கூகுள் மேப் மற்றும் ‘ஓன்டெல்லி’ செயலி ஆகியவற்றுடன் இணைந்து திறந்த நிகழ்நேர போக்குவரத்து தரவுகள் வைக்கப்படுதல், பேருந்துகளை ஒருங்கிணைத்தல் போன்ற பல திருப்புமுனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அறிதிறனான, நம்பகரமான போக்குவரத்து திட்டத்தில் தில்லி மேலும் பல மைல்கல்லை அடைய இந்த கூட்டாண்மை உதவும்’ என்றாா்.