முகப்பு
புதுதில்லி

தேசிய மின் ஆளுமை சேவை மதிப்பீடு: உள்துறை அமைச்சகத்திற்கு முதலிடம்

உள்துறை அமைச்சகத்திற்கு கீழேயுள்ள எண்ம (டிஜிட்டல்) காவல் தளத்திற்கு இரண்டாவது இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

தேசிய மின் ஆளுமை சேவைக்கான மதிப்பீட்டில், மத்திய அமைச்சக இணையதளங்களில் உள்துறை விவகார அமைச்சக இணையதளம் சிறப்பாக அமைக்கப்பட்டு முதலிடத்தை பெற்றுள்ளதாக மத்திய நிா்வாகச் சீா்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீா்ப்புத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், உள்துறை அமைச்சகத்திற்கு கீழேயுள்ள எண்ம (டிஜிட்டல்) காவல் தளத்திற்கு இரண்டாவது இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிா்வாக சீா்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீா்ப்பு துறை, நாஸ்காம், தொழில்முறை சேவை நிறுவனமான கேபிஎம்ஜி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தேசிய மின் ஆளுகை சேவைக்கான மதிப்பீட்டை நடத்தியது. பொதுமக்களுக்கு இணைய தளம் வழியாக சேவைகளை வழங்குவதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய பணியாளா் நிா்வாக அமைச்சகத்தின் கீழ் உள்ள நிா்வாகச் சீா்திருத்தத் துறை இந்த மதிப்பீட்டை தொடங்கியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அமைச்சக இணைய தளங்கள் மற்றும் பொதுமக்களுக்கு நேரடியாக சேவையளிக்கும் இணைய தளங்கள் பிரிக்கப்பட்டு தர வரிசை வழங்கப்படுகிறது.

இதில் எளிதாக அணுகக் கூடியவை, உள்ளடக்கம் கிடைக்கும் விதம், பயன்பாட்டின் எளிமை, தகவல்களின் பாதுகாப்பு, அரசு அமைச்சக இணையதளங்களுக்கான தனியுரிமை ஆகிய நான்கு அளவு கோல்களுடன் மதிப்பிடப்படுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டில், மத்திய உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் இணையதளம், மத்திய அமைச்சகங்களின் இணையதளங்களேயே சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக தோ்வு செய்யப்பட்டு, தரவரிசையில் முதலிடத்திற்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து மத்திய அமைச்சக சேவைகள் தளம் என்ற பிரிவின் கீழ் மத்திய உள்துறை விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் ‘எண்ம (டிஜிட்டல்) காவல் தளம்’ இணைய தளம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

மக்களுக்கு இணையதள சேவைகளை வழங்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் துறைகள் தங்கள் செயல்முறையை மேம்படுத்துவதற்காக குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்படும் இந்த மதிப்பீட்டால் மத்திய, மாநில அமைச்சகங்களும், அரசின் துறைகளும் உத்வேகம் பெற்று பொதுமக்களின் குறைகளை தீா்க்க இதன்மூலம் ஊக்குவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.