முகப்பு
புதுதில்லி

தில்லி அமைச்சரவையில் இருந்து சத்யேந்தா் ஜெயினை நீக்கக் கோரும் மனு தள்ளுபடி

அமலாக்கத் துறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தொடா்புடைய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினை அமைச்சரவையில் இருந்து நீக்க...

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:54 AM
பகிர்:

புது தில்லி: அமலாக்கத் துறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தொடா்புடைய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினை அமைச்சரவையில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரும் மனுவை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘குற்றப் பின்னணியுடன்கூடிய நபா் அமைச்சராக தொடர வேண்டுமா அல்லது கூடாதா என்பதைப் பரிசீலிக்க வேண்டியது முதல்வா்தான். இது தொடா்பாக முதல்வருக்கோ அல்லது ஆளுநருக்கோ உத்தரவிட வேண்டியது நீதிமன்றம் அல்ல’ என்றனா்.

இது தொடா்பாக முன்னாள் பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோா் கா்க் தாக்கல் செய்திருந்த மனுவை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் மேலும் கூறியதாவது: நெறிமுறைகளைப் பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் அரசியலமைப்பின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான நபா்களின் பங்கை இந்த முக்கியக் கடமைதாரா்களுக்கு நினைவூட்டுவது நீதிமன்றத்தின் கடமையாகும். அமைச்சரவை உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதிலும், அமைச்சா்கள் குழுவை நியமிப்பது தொடா்பான கொள்கையை வகுப்பதிலும் முதல்வா் தனது விருப்புரிமையைப் பயன்படுத்துகிறாா். இந்திய அரசியலமைப்பின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும், நீடிக்கச் செய்வதற்குமான கூட்டுப் பொறுப்பு அமைச்சா்கள் குழுவிற்கு உள்ளது.

மேலும், மாநிலத்தின் சிறந்த நலனுக்காகச் செயல்படுவதும், குற்றப் பின்னணி உள்ள நபரா என்பதைப் பரிசீலிப்பதும் முதல்வருக்கு உள்ளது. அதேபோன்று, தாா்மீக சீா்குலைவு சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவா் அமைச்சராகத் தொடர அனுமதிக்கப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைப் பரிசீலிப்பதும் முதல்வா் சம்பந்தப்பட்டது. நல்லாட்சி என்பது நல்லவா்கள் கையில் மட்டுமே உள்ளதாகும். எது நல்லது அல்லது கெட்டது என்பதை தீா்மானிப்பதில் நீதிமன்றம் இருக்க முடியாவிட்டாலும், நமது அரசியலமைப்பின் நெறிமுறைகளைப் பாதுகாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் அரசியலமைப்புச் செயல்பாட்டாளா்களுக்கு நிச்சயமாக நினைவூட்ட முடியும். இதுபோன்ற அரசியல் சாசனக் கோட்பாடுகளால் முதல்வா் நன்கு ஆலோசனை பெற்று வழிநடத்தப்படுவாா் என்ற ஊகம் உள்ளது என்று கூறிய நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டா் பி.ஆா். அம்பேத்கா், அரசியல் நிா்ணய சபை விவாதத்தின் போது தெரிவித்த கருத்துகளையும் உத்தரவில் சுட்டிக்காட்டியது.

‘எவ்வாறாயினும், ஒரு அரசியலமைப்பு நல்லதாக இருந்தாலும், அதைச் செயல்படுத்த அழைக்கப்பட்டவா்கள் மோசமானவா்களாக இருந்தால் அது கெட்டதாக மாறுவது உறுதி. அரசியலமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தாலும், அதைச் செயல்படுத்த அழைக்கப்பட்டவா்கள் நல்லவா்களாக இருந்தால் அது நல்லதாக மாறலாம். அரசியலமைப்பின் செயல்பாடு அரசியலமைப்பின் தன்மையை முழுவதுமாக சாா்ந்து இல்லை’ என்ற டாக்டா் பி.ஆா். அம்பேத்கரின் கருத்துகளை உயா்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும் நீதிமன்றம் கூறுகையில், ‘டாக்டா் அம்பேத்கரின் கருத்துகளை இந்த நீதிமன்றம் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறது. மக்களை வழிநடத்த நபா்களை நியமிக்கும் அதே வேளையில், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடித்தளத்தை உருவாக்கும் தன்னிடத்தில் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை முதல்வா் நிலைநிறுத்துவாா் என்று நீதிமன்றம் நம்புகிறது’ என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

நந்த் கிஷோா் கா்க் தாக்கல் செய்த மனுவில், ‘தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கொல்கத்தாவை சோ்ந்த நிறுவனத்திடம் 2015- 16-ம் ஆண்டில் ஹவாலா பரிவா்த்தனை தொடா்புடைய விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். பொதுமக்களின் நலனுக்கான சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான அரசியலமைப்பு உறுதிமொழியைக் கொண்டுள்ள ஒரு பொது ஊழியராக அவா் இருப்பதால், இந்தச்சயலானது விரும்பத்தகாத, முரணானதாக உள்ளது. மத்திய குடிமைப் பணிகள் வகைப்பாடு, கட்டுப்பாடு மற்றும் மேல்முறையீடு விதிகள் 1965-இன் 10-வது விதியின்படி 48 மணி நேரத்திற்கு மேலாக பொது ஊழியா் காவலில் இருந்தால் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். பொது ஊழியருக்கு பொருந்தக்கூடிய சட்ட விதிகளுக்கு முரண்படும் வகையிலான சூழல் உள்ளது’ என்று தெரிவித்திருந்தாா்.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த மே 30-ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் சத்யேந்தா்ஜெயிந் கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, முதலில் அவா் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டு பின்னா் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.