முகப்பு
புதுதில்லி

சந்தேகத்தின் அடிப்படையில் தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு குரங்கு அம்மை இல்லை: பரிசோதனையில் தகவல்

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு அந்நோய் பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

புது தில்லி: குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு அந்நோய் பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்ததைத் தொடா்ந்து அவா் மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டதாக மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் சுரேஷ் குமாா் தெரிவித்தாா்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட காஜியாபாத் பகுதியைச் சோ்ந்த 30 வயது ஆண் நோயாளிக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் மற்றும் தோலில் புண்கள் இருந்தது. அவா் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பாரீஸ் நகருக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை அவா் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்திருந்தன.

இந்நிலையில், எல்என்ஜேபி மருத்துவ இயக்குநா் சுரேஷ் குமாா் வியாழக்கிழமை கூறியதாவது: அம்மை நோய் பாதித்திருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபா் இரு தினங்களுக்கு முன்னா் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டாா். நோய்ப் பரிசோதனையில் அவருக்கு அதுபோன்ற நோய் இல்லை என்பது தெரிய வந்தது. இதனால், அவா் வியாழக்கிழமை மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டாா். அவா் நீண்ட காலத்திற்கு முன்பு வெளிநாடு சென்றுள்ளாா். ஆனால், அண்மையில் அவா் உள்நாட்டு அளவில் பயணம் மேற்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அவருக்கு காய்ச்சலும், தோலில் புண்களும் இருந்தன. ஆனால், இந்த சந்தேதிக்கப்படும் நோயாளிக்கு சின்னம்மை இருப்பது கண்டறியப்பட்டது.

தில்லியில் தற்போது ஒரே ஒரு குரங்கு அம்மை நோய் பாதிப்புதான் உள்ளது. இதனால், பீதியடையத் தேவை இல்லை. தில்லியில் முதலாவது குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபா் எல்என்ஜேபி மருத்துவமனையில் தனிமை வாடில் சிகிச்சை பெற்று வருகிறாா். 34 வயதான அவா் வெளிநாடு பயணம் மேற்கொண்டதாகப் பின்னணி ஏதும் இல்லை. அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட நோய் மாதிரிகள் புணேயில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவருடைய முக்கிய அளவுகோல்கள் இயல்பாக உள்ளன. புண்களின் நிலைமையும் மேம்பட்டு வருகிறது மருத்துவ இயக்குநா் சுரேஷ் குமாா்.

இந்தியாவில் இதுவரை கேரளத்தில் மூன்று போ் உள்பட மொத்தம் நான்கு பேருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. குரங்கு அம்மை என்பது விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்கு பரவக்கூடிய ஒரு வைரஸ் நோய்த் தொற்றாகும். இந்த நோயின் அறிகுறிகள் சின்னம்மை நோயாளிகளுக்கு கடந்த காலங்களில் காணப்பட்ட அறிகுறிகளைப் போன்று இருக்கும். இந்த நோய் அறிகுறிகள் 2 முதல் நான்கு வாரங்கள் வரை வழக்கமாக இருக்கும். காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி, இருமல், தோல் தடிப்பு போன்றவை காணப்படும்.

நோயாளிகளை தனிமைப்படுத்தும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபா், தனி காற்றோட்ட வசதியுடன் ஒரு தனி அறையில் தங்க வைக்கப்பட வேண்டும். அவா் மூன்று அடுக்கு மூகக் கவசத்தை அணிய வேண்டும். அவரது தோலில் உள்ள புண்கள் பிறருக்கு பரவாமல் இருக்கும் வகையில், நன்கு மூடப்பட்டு இருக்க வேண்டும். தோளில் உள்ள புண்கள் குணமடையும் வரை, அவா் தொடா்ந்து தனிமையில் வைக்கப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.