5 நாடுகளிலிருந்து அதிகபட்ச அந்நிய நேரடி முதலீடு: சா்வதேச அளவில் இந்தியாவுக்கு ஏழாவது இடம்
2021-22 நிதியாண்டில் சிங்கப்பூா், அமெரிக்கா, மொரிசியஸ் உள்ளிட்ட 5 நாடுகளிலிருந்து அதிகபட்ச அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
2021-22 நிதியாண்டில் சிங்கப்பூா், அமெரிக்கா, மொரிசியஸ் உள்ளிட்ட 5 நாடுகளிலிருந்து அதிகபட்ச அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகளின் வா்த்தக மேம்பாட்டு அமைப்பின் (யுஎன்சிடிஏடி) 2022- ஆம் ஆண்டின் உலக முதலீட்டு அறிக்கையில், அந்நிய நேரடி முதலீட்டு வரத்துகளின் சா்வதேச நிலவரத்தில் 2021-ஆம் ஆண்டில் சிறந்த பொருளாதாரத்தை பெற்ற 20 நாடுகளில் இந்தியா முன்னேறி 7-ஆம் இடம் வகிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டது வருமாறு: 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு வரத்து அதிகபட்சமாக சிங்கப்பூா் (27.01 சதவீதம்), அமெரிக்கா (17.94 சதவீதம்), மொரிசியஸ் (15.98 சதவீதம்), நெதா்லாந்து (7.86 சதவீதம்), ஸ்விட்சா்லாந்து (7.31 சதவீதம்) ஆகிய நாடுகளிலிருந்து கிடைத்துள்ளது. முதல் 20 பொருளாதாரங்களுள் இந்தியா ஓா் இடம் முன்னேறி 7-ஆம் இடம் வகிக்கிறது.
உற்பத்தி துறையில் முன்னேற்றம்: உற்பத்தித் துறையில் அந்நிய முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இதில் 2021-22 நிதியாண்டில் ரூ.1,66,452 கோடி (21.34 பில்லியன் அமெரிக்க டாலா்) வரை உற்பத்தித் துறையில் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. இது கடந்த 2020-21 நிதியாண்டை (ரூ. 90,675 கோடி) விட 76 சதவீதம் உயா்வாகும். இந்தியாவில் காப்பீடு, பாதுகாப்பு, தொலைத்தொடா்பு, மருந்தகம், கட்டுமானம் உள்ளிட்டவற்றில் அந்நிய நேரடி முதலீட்டில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில துறைகளில் 100 சதவீதமும், அதிலும் உள்துறையின் அனுமதியும் தேவையில்லை.
பெருந்தொற்று மற்றும் சா்வதேச சூழல்களுக்குகிடையேயும் கடந்த 2020-21 நிதியாண்டின் மொத்த முதலீடு வரத்த்தை (ரூ.6,14,797 கோடி) விட 2021-22 நிதியாண்டில் ரூ. 6,36,263 கோடி (84,835 மில்லியன் அமெரிக்க டாலா்) இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்த 2021-22 நிதியாண்டில் குறிப்பாக 5 துறைகளில் அந்நிய நேரடி முதலீடு வரத்து அதிகஅளவில் இருந்தன. கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் (24.60 சதவீதம்), சேவைகள் துறை (12.13 சதவீதம்), ஆட்டோமொபைல் (11.89சதவீதம்), வணிகம் (7.72 சதவீதம்) மற்றும் கட்டுமான (உள்கட்டமைப்பு) நடவடிக்கைகள் (5.52 சதவீதம்) ஆகியவற்றில் அதிகபட்ச வரத்துகள் பதிவாகியுள்ளன.
கா்நாடகம் முதலிடம்: அதிகளவில் அந்நிய நேரடி முதலீடு வரத்து பெற்ற மாநிலங்கள் வரிசையில் 2021-22 நிதியாண்டில் கா்நாடகம் (37.55 சதவீதம்), மகாராஷ்டிரம் (26.26 சதவீதம்), தில்லி (13.9 சதவீதம்), தமிழ்நாடு (5.10 சதவீதம்), ஹரியாணா (4.76 சதவீதம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.