முகப்பு
புதுதில்லி

ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதுஉச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து ஓபிஎஸ், பி.வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
உச்ச நீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் (ஓ.பி.எஸ்.), பி.வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 29) பட்டியலிடப்பட்டுள்ளது. இதனிடையே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்ட சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தாா். ஓ.பன்னீா்செல்வம் அதிமுக அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்குவது உள்பட பல்வேறு தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுக் குழு அறிவிப்பு சட்டவிரோதமானது; இக்குழுவை கூட்ட முறையாக தோ்ந்தெடுக்கப்படாத அவைத் தலைவா் தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம் இல்லை. மேலும், பொதுக்குழு குறித்து அனைத்து உறுப்பினா்களுக்கும் 15 நாள்களுக்கு முன்னா் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் விதியாகும். ஆனால், அவ்வாறு தகவல் தெரிவிக்கப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழு நடத்தத் தடை இல்லை என்று உத்தரவு பிறப்பித்திருந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து ஓ. பன்னீா்செல்வம் கடந்த ஜூலை 13-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். ‘இந்தப் பொதுக்குழுக் கூட்டமானது ஒருங்கிணைப்பாளா் கையெழுத்து இல்லாமலும், உரிய அழைப்புக் கடிதம் அளிக்காமலும் நடைபெற்றுள்ளது. இதை உயா்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, பி.வைரமுத்து என்பவரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இதைத் தொடா்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமா்வு முன் ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் குரு கிருஷ்ணகுமாா், ‘ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். அப்போது, தலைமை நீதிபதி, இந்த விவகாரம் தொடா்பான மனுக்கள் அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று கூறியிருந்தாா்.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், அது நீக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அதே அமா்வு முன் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனிடையே, அஇஅதிமுக தரப்பிலும் கேவியட் மனு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞா் பி.வினோத் கண்ணா தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், ‘ஓபிஎஸ், பி.வைரமுத்து ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் முன், தங்கள் தரப்பு நியாயத்தையும் கேட்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.