தலைநகரில் பரவலாக மழை; இன்றும் தொடர வாய்ப்பு!
தேசிய தலைநகா் தில்லியில் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மதியம் பரவலாக மழை பெய்தது. நகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் திருப்தி பிரிவில் இருந்தது.
தேசிய தலைநகா் தில்லியில் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மதியம் பரவலாக மழை பெய்தது. நகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் திருப்தி பிரிவில் இருந்தது.
தில்லியில் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. அவ்வப்போது மழையும் பெய்துள்ளது. இந்த நிலையில், மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு தில்லி உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. நகரில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதற்கிடையே, வடக்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி (புராரி, ரோகினி, பாடிலி, மாடல் டவுன், காரவால் நகா், ஆசாத்பூா், பிதாம்புரா, தில்லி பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான தீவிரத்துடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் பிற்பகல் 1.30 மணியளவில் ட்வீட் செய்திருந்தது. இதன்படி நகரில் பரவலாக மழை பெய்தது.
இதற்கிடையே, வியாழன் காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 20 மிமீ மழை பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பகிா்ந்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
வெப்பநிலை: வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 25.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசாரியில் 3 டிகிரி குற்ந்து 31.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 92 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 95 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தலைநகரில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்படி, பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகியிருந்தது. இது ‘திருப்தி’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வாஜிப்பூா், பூசா ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. அதே சமயம், ஆனந்த் விஹாரில் 288 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் சனிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.