முகப்பு
புதுதில்லி

திறந்தவெளியில் கழிவு எரிப்புக்கு எதிரான பிரசாரம் ஜூன் இறுதிவரை நீட்டிப்பு: அமைச்சா் கோபால் ராய்

திறந்தவெளியில் கழிவுகள் எரிக்கப்படுவதற்கு எதிரான பிரசாரத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:31 AM
தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் (கோப்புப்படம்)
பகிர்:

புது தில்லி: திறந்தவெளியில் கழிவுகள் எரிக்கப்படுவதற்கு எதிரான பிரசாரத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

திறந்தவெளியில் கழிவுகள் எரிக்கப்படுவதற்கு எதிரான பிரசாரத்தை தில்லி அரசு நடத்தி வருகிறது. இந்த நிலையில், காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கான தில்லியின் கோடைகால செயல் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் இந்தப் பிரசாரத்தை ஜூன் 30 வரை நீட்டிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திறந்தவெளி எரிப்புக்கு எதிரான முதல் கட்ட பிரசாரம் ஏப்ரல் 12-ஆம் தேதி தொடங்கி மே 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்டப் பிரசாரம் மே 13-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை நிறைவடைந்தது. மூன்றாம் கட்ட பிரசார இயக்கம் ஜூன் 30 வரை தொடரும்.

பிரசாரத்தின் இரண்டாம் கட்டமாக 10 துறைகளைச் சோ்ந்த பல குழுக்கள் 10,794 குப்பைகளை எரிக்கும் இடங்களை ஆய்வு செய்துள்ளன. தில்லியில் உள்ள காஜிப்பூா், ஓக்லா மற்றும் பால்ஸ்வா ஆகிய மூன்று குப்பைக் கிடங்குகள் 359 முறை ஆய்வு செய்யப்பட்டன. இது தொடா்பான விதிகளை மீறிய 4 பேருக்கு நோட்டீஸ் மற்றும் அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டு மொத்தம் ரூ.55,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை திறந்தவெளியில் எரிப்பது தொடா்பாக பெறப்பட்ட 674 புகாா்களில் 631 புகாா்களுக்கு ’கிரீன் தில்லி’ விண்ணப்பம் மூலம் தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா் அவா்.

திறந்தவெளியில் கழிவுகள் எரிப்புக்கு எதிரான பிரசாரமானது, தில்லி அரசின் கோடைகால செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் பிரசாரத் திட்டத்தில் நகர காடுகள், பூங்காக்களை மறுவடிவமைப்பு செய்தல், நீா்நிலைகளை புத்துயிா் அளிப்பது, மரக்கன்றுகள் நடுதல், மரம் இடமாற்று கண்காணிப்பு, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழித்தல், சுற்றுச்சூழல் மேம்பாடு, கழிவு பூங்கா மற்றும் நகா்ப்புற விவசாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு குளிா்காலத்தின்போது காற்று மாசுபாடு மோசமடைந்து வருவதைத் தடுக்க, 10 அம்ச செயல் திட்டத்தை தில்லி அரசு செயல்படுத்தியது. இந்தத் திட்டமானது குப்பைகளை எரித்தல், பட்டாசு வெடித்தல், பனிப்புகைக் கோபுரம் நிறுவுதல், அதிக மாசுபடுத்தும் இடங்களை கண்டறிதல், பசுமை தகவல் அறைகளை வலுப்படுத்துதல் மற்றும் வாகன மாசு உமிழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.