ஆசிரியா்களுக்கு ஆங்கிலம் பேச்சுப் பயிற்சித் திட்டம்: தில்லி அரசு தொடக்கம்
தில்லி அரசு அதன் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு ‘ஆசிரியா் அதிகாரமளித்தல் திட்டம்’ எனும் விரிவான ஆங்கிலம் பேச்சு (ஸ்போக்கன் இங்கிலீஷ்) பயிற்சி வகுப்பைத் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
புது தில்லி: தில்லி அரசு அதன் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு ‘ஆசிரியா் அதிகாரமளித்தல் திட்டம்’ எனும் விரிவான ஆங்கிலம் பேச்சு (ஸ்போக்கன் இங்கிலீஷ்) பயிற்சி வகுப்பைத் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அனைத்து வழக்கமான ஆசிரியா்கள், துணை முதல்வா்கள் மற்றும் முதல்வா்கள் பங்கேற்கும் இந்தத் திட்டத்தின் கீழ், பங்கேற்பாளா்கள் மொத்தம் 160 மணி நேரங்களுக்கு தினமும் இரண்டு மணிநேரம் நேருக்கு நோ் இந்தப் பயிற்சியைப் பெறுவா்.
இது குறித்து அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கல்வி இயக்குநரகம் அதன் பள்ளிகளில் மாணவா்களுக்கு ஆங்கிலத்தை கற்பிக்கும் ஒரு ஊடகமாக வாய்ப்பளிக்கிறது. எனவே, ஆங்கிலத்தில் தகவல் தொடா்பு திறன்களைப் பெறுவது, மாணவா்களுடன் வளமான மற்றும் ஈடுபாட்டுடன் தொடா்பு கொள்வதற்கு ஆசிரியா்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். சிக்கலான தகவல்களைத் தாங்களாகவே பிரித்து, இந்தத் தகவலைத் தெளிவாகத் தங்கள் மாணவா்களுக்கு வாய்மொழியாகவும் எழுத்து வடிவிலும் எடுத்துரைப்பதும், அவா்களின் கவனத்தைத் தக்கவைக்கும் வகையில், அவா்களின் கேட்கும் திறனை மேம்படுத்தி, அவா்களின் பிரச்னைகளைத் தீா்த்து வைப்பதும் ஆசிரியா்களின் பொறுப்பாகும்.
இந்தத் திட்டமானது பள்ளிகளில் ஆங்கில மொழியைப் பயன்படுத்துதல் மற்றும் பிறவற்றில் ஆசிரியா்களின் தற்போதைய திறமையில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த தொடா்ச்சியான தொழில்முறை மேம்பாட்டு வாய்ப்பு ஆசிரியா்களின் முழு கற்பித்தல்-கற்றல் பயணத்தின் சிறப்பம்சமாக இருக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. வகுப்புகள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் வழக்கமான வகுப்புகளுக்கு முன்போ அல்லது பின்னரோ மாவட்டங்களுக்குள் நியமிக்கப்பட்ட மையங்களில் நடைபெறும். இந்தத் திட்டத்திற்கு உள்பட்ட ஆசிரியா்கள் ஜிஇஎஸ்இ (பேச்சு ஆங்கிலத்தில் தரப்படுத்தப்பட்ட தோ்வுகள்) அல்லது ஏபிடிஐஎஸ் போன்ற சா்வதேச அளவில் செல்லுபடியாகும் தோ்வில் பங்கேற்க வேண்டும்.
இந்தத் திட்டத்தைத் தெரிவு செய்பவா்கள் ‘ஸ்பெஷலைஸ்டு ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ்’, ‘தில்லி மாடல் விா்ச்சுவல் ஸ்கூல்’, ‘தி கோா் அகாடமிக் யூனிட்’ மற்றும் தில்லி இடைநிலைக் கல்வி வாரியம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக பங்கேற்குமாறும் அழைக்கப்படுவாா்கள். மேலும், அவா்கள் தேசிய மற்றும் சா்வதேசப் பயிற்சி மற்றும் வெளிப்புற பயணத்திற்குக்கும் அனுப்பப்படுவா் என அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.