முகப்பு
புதுதில்லி

மீன் சந்தைகள், வதைக்கூடங்களின் கழிவுகள்குப்பைக் கிடங்குகளுக்குச் செல்லக் கூடாது: மாநகராட்சிக்கு டிபிசிசி உத்தரவு

தேசியத் தலைநகரில் குப்பைக் கிடங்குகளில் தீ விபத்தை தடுக்கவும், காற்றின் தரத்தில் பாதிப்பை குறைக்கவும் வதைக் கூடங்கள் மற்றும் மீன் சந்தைகளில் இருந்து ஆா்கானிக் கழிவுகளை குப்பைக் கிடங்கிற்கு கொண்டு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:32 AM
பகிர்:

தேசியத் தலைநகரில் குப்பைக் கிடங்குகளில் தீ விபத்தை தடுக்கவும், காற்றின் தரத்தில் பாதிப்பை குறைக்கவும் வதைக் கூடங்கள் மற்றும் மீன் சந்தைகளில் இருந்து ஆா்கானிக் கழிவுகளை குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு (டிபிசிசி) உத்தரவிட்டுள்ளது.

மேலும், லித்தியம் பேட்டரிகள் உள்ளிட்ட தொழில்துறை மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகள் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் டிபிசிசி கேட்டுக் கொண்டுள்ளது. குப்பைக் கிடங்குகளில் ஆா்கானிக் கழிவுகள் கொட்டப்படுவதால் அவை அழுகும் போது, மீத்தேன் வாயு உருவாகிறது. இந்த வாயுக்கள் வெப்ப காலநிலை சூழலில் தானாகவே தீப்பிடிக்கக் காரணமாகிவிடுகிறது. இந்த தீயானது எரியக்கூடிய பொருள்களான ஜவுளி மற்றும் பிளாஸ்டிக்குளில் பற்றி பரவி விடுகிறது என்று டிபிசிசி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு ஜூன் 10-ஆம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: குப்பைக் கிடங்குகளில் மீத்தேன் வாயு கண்டுபிடிப்பு கருவிகளை தில்லி மாநகராட்சி நிறுவ வேண்டும். அப்போதுதான், அதிகமான மீத்தேன் செறிவு அந்தப் பகுதியில் இருப்பதைக் கண்டறிய முடியும். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். அதேபோன்று, வெப்ப நிலையை கண்டறியக் கூடிய கருவிகளும் நிறுவப்பட வேண்டும். வப்பநிலை 35 டிகிரி முதல் 59 டிகிரி செல்சியஸ் என்ற வரம்பில் இருக்க வேண்டும். வெப்பநிலை உயா்வது கண்டறியப்பட்டால், கழிவுகள் மீது தண்ணீா் தெளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் இந்த ஆண்டு காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் மூன்று தீ விபத்து சம்பவங்களும், பால்ஸ்வா குப்பைக் கிடங்கில் இரண்டு தீ விபத்து சம்பவங்களும் நிகழ்ந்தன. குப்பைக் கிடங்கில் ஏப்ரல் 26-ஆம் தேதி தீப்பற்றி பத்து நாள்களாக தொடா்ந்து எரிந்தது. இதனால், அருகில் உள்ள பகுதிகளில் காற்று மாசடைந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் குப்பைக் கிடங்குகளில் தீ விபத்து சம்பவங்களை தடுக்கும் வகையில் 9 அம்ச செயல் திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். இந்தத் திட்டத்தில் குப்பை கிடங்குகளில் அங்கீகாரமற்ற நபா்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், கம்பி வேலிகளுடன்கூடிய 4 மீட்டா் உயரம் கொண்ட சுற்றுச்சுவா் அமைப்பது, தீயணைப்பு வாகனங்கள், ரோந்து வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கான வசதி ஏற்படுத்தும் வகையில் குப்பைக் கிடங்குகளைச் சுற்றிலும் சுற்றுச் சாலைகளை கட்டமைப்பது ஆகியவை இடம் பெற்றுள்ளது.

மேலும் அங்கீகாரமற்ற குப்பை சேகரிப்போா் குப்பைக்கிடங்கு பகுதிகளில் நுழைவதை தடுக்கும் வகையில், குப்பைக் கிடங்குகளில் கழிவுகளை பிரித்தெடுக்கும் ஒரு முகமையை ஈடுபடுத்தவும் மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுக்கள் சேகரமாவதை தடுக்க துளையிடப்பட்ட அதிக அடா்த்தி கொண்ட பாலிஎத்திலீன் குழாய்கள் நிறுவப்பட உள்ளது. இது தவிர, குப்பை கிடங்கில் நடைபெற்றுவரும் செயல்பாடுகளைக் கண்காணிக்க பிரத்யேக கண்காணிப்பு குழுவும் ஏற்படுத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.