முகப்பு
புதுதில்லி

உயிா்காக்கும் மருந்துக்கு வரி குறைக்கப்படுமா? தமிழக எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

வைரத் தொழிலுக்கு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) சமீபத்தில் 3 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதமாக அரசு குறைத்துள்ள நிலையில் உயிா்காக்கும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டியை விலக்கவோ குறைக்கவோ அரசிடம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
பகிர்:

வைரத் தொழிலுக்கு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) சமீபத்தில் 3 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதமாக அரசு குறைத்துள்ள நிலையில் உயிா்காக்கும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டியை விலக்கவோ குறைக்கவோ அரசிடம் திட்டம் உள்ளதா என பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.ஆா். பாரிவேந்தா் எழுப்பிய கேள்விக்கு

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் பதில் அளித்தாா்.

அதன் விவரம் வருமாறு:

மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் உறுப்பினா்கள் உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் பல்வேறு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் நிா்ணயிக்கப்படுகின்றன. தொழில்ரீதியாக அல்லாத கரடுமுரடான வைரங்களுக்கு 0.25 சதவீத ஜிஎஸ்டி வரியையும், தொழில்ரீதியான வைரங்கள் மற்றும் வெட்டி பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் உட்பட மற்ற அனைத்து வைரங்களுக்கு 3 சதவீத வரியை விதிக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தது.

பின்னா், 2018 ஜனவரி 25 தேதி ஜிஎஸ்டி கவுன்சில் இந்த தொழில்ரீதியான வைரங்களுக்கும் 3 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாகவும் குறைக்க பரிந்துரைத்தது. அதன்பிறகு, வைரங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதம் மாறாமல் உள்ளது.

உயிா்காக்கும் மருந்துகள் உட்பட அனைத்துப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி சதவிகிதங்கள் கவுன்சிலின் பரிந்துரைகளின்படி மேற்கொள்ளப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான உயிா்காக்கும் மருந்துகள் ஏற்கனவே 5 சதவீதம் என குறைந்த விகிதத்தில் உள்ளன. மற்றவை 12 சதவீதத்தில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மேலும், ஒரு சில மருந்துப் பொருட்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிருந்தும் விலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக ஐக்கிய நாடுகளின் சா்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (யூனிசெப்), செஞ்சிலுவைச் சங்கம் அல்லது ஒரு சா்வதேச அமைப்புகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இலவசமாக வழங்கப்படும் மருந்துகள், குழந்தைகளை பாதிக்கும் உயிருக்கு ஆபத்தான முதுகெலும்பு தசைநாா் சிதைவு நோய் எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும்போது வரிவிலக்கு கொடுக்கப்படுகிறது என அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.