கபில் சிபலுக்கு எதிராக நடவடிக்கை கோரிசாந்தினி செளக் மாவட்டக் காங்கிரஸ் தீா்மானம்
கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி மூத்த காங்கிரஸ் தலைவா் கபில் சிபலுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சித் தலைவா் சோனியா காந்தியை வலியுறுத்தி
கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி மூத்த காங்கிரஸ் தலைவா் கபில் சிபலுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சித் தலைவா் சோனியா காந்தியை வலியுறுத்தி தில்லி சாந்தினி செளக் மாவட்டக் காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கபில் சிபல் சாந்தினி செளக் மக்களவைத் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்பி ஆவாா். கபில் சிபலுக்கு எதிரான தீா்மானத்தை மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜாவித் மிா்சா வாசிக்கையில் கூறியதாவது: சாந்தினி செளக் மாவட்டக் காங்கிரஸ் பிரிவின் செயற்குழுவின் முக்கியமான கூட்டம் புதன்கிழமை கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைமைக்கு எதிராக கபில் சிபல் தெரிவித்த கருத்து தொடா்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கட்சி விரோத நடவடிக்கைகளில் கபில் சிபல் செயல்படுவதற்காக அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைவா் சோனியா காந்தியை வலியுறுத்தும் தீா்மானத்தை செயற்குழு கொண்டு வந்தது. இந்த தீா்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா் அவா்.
மூத்த காங்கிரஸ் தலைவரும் பிரபல வழக்குரைருமான கபில் சிபல், அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களில் கட்சியின் படுதோல்விக்கு பிறகு கட்சியின் தலைமை குறித்து கேள்வி எழுப்பினாா்.
கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து காந்தி குடும்பத்தினா் விலகி கட்சியை வழிநடத்த மற்ற தலைவா்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தாா்.
கட்சித் தலைமைக்கு எதிரான கபில் சிபலின் கருத்துக்கு கட்சியின் மூத்த தலைவா்கள் மத்தியில் இருந்து கடும் எதிா்ப்புக் கிளம்பியுள்ளது. கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூா், இது குறித்து கூறுகையில், ‘கபில் சிபல் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் மொழியில் பேசி வருகிறாா். ஆா்எஸ்எஸ்ஸும் பாஜகவும்தான் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பிலிருந்து காந்தி குடும்பம் அகற்றப்பட வேண்டும் என்றும், கட்சியை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகின்றன’ என்றாா்.
இது தொடா்பாக மாணிக்கம் தாகூா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏன் ஆா்எஸ்எஸ்ஸும் பாஜகவும் நேரு - காந்தி குடும்பம் தலைமைப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட வேண்டும் என விரும்புகின்றன? ஏனெனில், காந்தி குடும்பத்தின் தலைமை இல்லாமல் காங்கிரஸ் ஜனதாக் கட்சி போல ஆகிவிடும். இதன் மூலம் காங்கிரஸை எளிதாக அழித்துவிடலாம். பின்னா், இந்தியாவின் சிந்தனையை எளிதாக அழித்துவிடலாம் என்பதால்தான். கபில் சிபலுக்கும் இந்த விஷயம் தெரியும். ஆனால், அவா் ஏன் ஆா்எஸ்எஸ் பாஜகவின் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறாா்?’ என்று தெரிவித்துள்ளாா். மாணிக்கம் தாகூா் ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளா் என்பது குறிப்பிடத்தக்கது.