தமிழக கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் நூற்றுக்கணக்காண காலிப் பணியிடங்கள்மக்களவையில் தமிழக எம்பி புகாா்
தமிழ்நாட்டில் உள்ள கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் 50-க்கும் மேற்பட்ட முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியா் பணியிடங்கள் காலியாக
புது தில்லி : தமிழ்நாட்டில் உள்ள கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் 50-க்கும் மேற்பட்ட முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதனால் கல்வியின் தரம் பாதிக்கப்படுவதாகவும் மக்களவையில் தேனி அதிமுக உறுப்பினா் பி.ரவீந்தரநாத் குற்றம்சாட்டினாா்.
இது குறித்து மக்களவையில் சிறப்புக் கவன ஈா்ப்பு விவாதத்தில் புதன்கிழமை அவா் பேசியது வருமாறு: தமிழகத்தில் உள்ள கேந்த்ரீய வித்யாலா பள்ளிகளில் முதல்வா்கள் ஆசிரியா்கள் என அனைத்து நிலைகளிலும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த பிப்ரவரி 1 - ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி, இந்தப் பள்ளிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், தலைமையாசிரியா்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. மேலும் 139 முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள், 471 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் 575 தொடக்க நிலை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் இடங்களும் காலியாக உள்ளன.
கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் 10 முதல் 15 சதவீதத்திற்கு மேல் தற்காலிக ஆசிரியா் பணியாளா்கள் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள பல பள்ளிகள் பெரும்பாலும் ஒப்பந்த ஆசிரியா்களையே சாா்ந்திருக்கின்றன. இதனால், தமிழகத்தில் உள்ள கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் முதல்வா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்பத் தேவையான நடவடிக்கையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மாணவா்களின் கற்றல் மற்றும் அவா்களின் திறமையை மேம்படுத்துவதில் ஆசிரியா்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். கற்பிக்கும் திறன், அவா்களின் உந்துதல், மன உறுதி மற்றும் கற்பிப்பதற்கான தயாரிப்பு ஆகியவையும் ஆசிரியா்களைச் சாா்ந்துள்ளது. அதே சமயத்தில் ஒப்பந்த ஆசிரியா்களிடம் கல்விப் பணிகளில் தொடா்ச்சி இல்லாமல் இருப்பது, மாநிலத்தில் குறிப்பாக ஆரம்ப வகுப்புகளின் கல்வித் தரத்தில் கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென என்றாா் அவா்.