முகப்பு
புதுதில்லி

ஹோலி கொண்டாட்டம்: தில்லியில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு

ஹோலி கொண்டாட்டங்களின் போது ரெளடித்தனத்தை தடுக்கவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கவும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தில்லி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

புது தில்லி: ஹோலி கொண்டாட்டங்களின் போது ரெளடித்தனத்தை தடுக்கவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கவும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ரோந்துப் பணி தீவிரம்: இது குறித்து தில்லி காவல் துறை கூடுதல் செய்தித் தொடா்பாளா் அனில் மிட்டல் தெரிவித்ததாவது: ஹோலி பண்டிகையின்போது ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். போக்குவரத்து விதிகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் கூடுதல் படை வழங்கப்பட்டுள்ளது. ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் மாவட்ட போலீஸாா் மூலம் பாதுகாப்பு போடப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவா்கள் மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். பெண்களின் பாதுகாப்பும் தில்லி காவல்துறையின் முன்னுரிமையாக இருக்கும். பதற்றமான பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றாா் அவா்.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை: குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் போன்ற சம்பவங்களை கண்காணிக்கவும் தில்லி போக்குவரத்து காவல்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதுகுறித்து காவல் துறை இணை ஆணையா் (போக்குவரத்து) விவேக் கிஷோா் கூறியதாவது: சாலைகளில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தில்லி போக்குவரத்து போலீஸாா் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனா். முக்கியச் சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்து போலீஸாா் நிறுத்தப்படுவா். போக்குவரத்து குழுக்கள் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்படும். ஹோலி கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிகளை அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மூன்று போ் அமா்ந்து செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்றாா் அவா்.

சிறப்பு போலீஸ் பாதுகாப்பு:காவல் துணை ஆணையா் அளவிலான மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘ பல பகுதிகளில் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். கள்ளச்சாராயம் விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு மாவட்டங்களில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழிப்பறி செய்பவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் படை வரவழைக்கப்பட்டு, ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்படும். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பொதுமக்களிடம் போலீஸாா் கலந்துரையாடுவா். அப்போதுதான் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாது. பொது இடங்களில் மது அருந்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.