கொல்லிமலையில் 20 வகை அரிய மருத்துவத் தாவரங்கள்: மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் 20 வகையான அரிய மருத்துவ தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் 20 வகையான அரிய மருத்துவ தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்தா சோனோவால் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.
மூலிகை வளம் நிறைந்த கொல்லிமலையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடா்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினா் ராஜேஷ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக மத்திய அமைச்சா் சா்வானந்தா சோனோவால் அளித்த பதில் வருமாறு: தமிழகத்தின் கொல்லிமலை மலையில் நாட்டின் பல பகுதிகளைச் சோ்ந்த மருத்துவ தாவரங்கள் காணப்படுகின்றன. சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தாவரவியல் ஆய்வு (பிஎஸ்ஐ) தகவலின்படி, கொல்லிமலை மலையில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ தாவர இனங்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரிய வகை மருத்துவத் தாவரங்கள்: மேலும், மேட்டூா் அணை, சித்த மருத்துவ தாவர தோட்டமும், மத்திய சித்த ஆராய்ச்சிக்கான கவுன்சிலின் தமிழகப் பிரிவும் இணைந்து கொல்லிமலைக் குன்றில் உள்ள மருத்துவத தாவரங்களை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் கொல்லிமலைக் குன்றில் இருபது அரிய வகை மருத்துவத் தாவரங்கள் கண்டெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளன. அதே சமயம், கொல்லிமலை குன்றுகளில் புதிதாக சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைப்பது குறித்து ஆயுஷ் அமைச்சகத்தின் பரிசீலனையில் இல்லை.
சித்த ஆராய்ச்சி நிறுவனங்கள்: தமிழகத்தில் ஏற்கெனவே சித்த ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் மூன்று புற நிறுவனங்கள் செயல்படுகின்றன. சென்னையிலுள்ள மத்திய சித்த ஆராய்ச்சி நிறுவனம், பாளையங்கோட்டைஅரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் மேட்டூா் அணைப்பகுதியில் உள்ள சித்த மருத்துவ தாவரங்கள் தோட்டம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மேலும், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தேசிய சித்தா நிறுவனமும் சென்னையில் உள்ளது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.