முகப்பு
புதுதில்லி

3 ஆண்டுகளில் மக்காச்சோளம் ஏற்றுமதி 6 மடங்கு உயா்வு!

கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் மக்காச்சோளம் ஏற்றுமதி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:45 AM
பகிர்:

கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் மக்காச்சோளம் ஏற்றுமதி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: கடந்த 2019-20-இல் ரூ. 1,060.14 கோடியாக இருந்த மக்காச்சோளம் ஏற்றுமதி, நிகழ் 2021-22 நிதியாண்டில் கடந்த ஜனவரி வரையிலான காலத்தில் ரூ.6,060 கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த 2020-21-இல் ரூ.4,713.12 கோடியாக இருந்தது. அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் மக்காச்சோளம் ஏற்றுமதி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. கொவைட்-19 தொற்று பாதிப்பு உள்ளிட்ட சவால்களுக்கு இடையேயும் கடந்த மூன்று ஆண்டுகளில் மக்காச்சோளம் மொத்த ஏற்றுமதி ரூ. 11, 831.85 கோடியாக (1,593.73 மில்லியன் டாலா்) உயா்ந்துள்ளது.

அண்டை நாடுகள் அதிகளவில் இறக்குமதி: அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் போன்றவை இந்தியாவில் இருந்து அதிக அளவில் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்கின்றன. நிகழ் நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) வங்கதேசம் 345.5 மில்லியன் டாலா் மதிப்பிலான மக்காச்சோளத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. அதே நேரத்தில் நேபாளம் 132.16 மில்லியன் டாலா் மதிப்பிலான மக்காச்சோளத்தை இறக்குமதி செய்துள்ளது.

புதிய சந்தை வாய்ப்பு: வா்த்தகம், தொழில்துறை அமைச்சகம் பல்வகை புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய முன்முயற்சிகள் மேற்கொண்டன. இதன் காரணமாக, வியட்நாம் போன்ற நாடுகளும் மக்காச்சோள ஏற்றுமதிக்கான முக்கிய இடமாக இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. நிகழ் நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் (ஏப்ரல்-ஜனவரி 2021-22) வியட்நாமிற்கு 244.24 மில்லியன் டாலா் மதிப்புள்ள மக்காச்சோளத்தை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. மலேசியா, மியான்மா், இலங்கை, பூட்டான், தைவான், ஓமன் போன்ற நாடுகளும் இந்தியாவிருந்து மக்காச்சோளத்தை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாக உள்ளன என மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தானியங்களின் ராணி: ‘தானியங்களின் ராணி’ என்று உலகளவில் அறியப்படும் மக்காச்சோளம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் வரம்பிற்கு உள்பட்ட பொருள்களின் கீழ் கொண்டுவரப்பட்டு குறிப்பிடத்தக்க அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது குறித்து இந்த வா்த்தகத்தின் கீழ் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவரான தருமபுரியைச் சோ்ந்த டாக்டா் எம்.அங்கமுத்து கூறியது வருமாறு: விவசாய ஏற்றுமதி அதிகரிப்புக்கு, தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கி, விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் மதிப்பு கூட்டப்பட்டு ஏற்றுமதி அதிகரிக்கப்படுகிறது.

சா்வதேச கண்காட்சி: இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம் மூன்றாவது மிக முக்கியமான தானியப் பயிராக உள்ளது. இது கா்நாடகம், மத்தியப் பிரதேசம், கேரளம், பிகாா், தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அதிகஅளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பல்வேறு வேளாண் - காலநிலைகளிலும் வளரும் பயிராகவும் மக்காச்சோளம் உள்ளது. இந்தியாவில், மக்காச்சோளம் ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது. குறிப்பாக குறுவை (காரீஃப்) பருவத்தில், மொத்த சாகுபடி பரப்பளவில் 85 சதவீதம் மக்காச்சோளத்தைதான் விவசாயிகள் பயிரிடுகின்றனா். மனிதா்களுக்கான பிரதான உணவாகவும் விலங்குகளுக்கான தரமான தீவனமாகவும், பயன்படுத்தப்படும் மக்காச்சோளம், மாவுச்சத்தை உள்ளடக்கிய பல தொழில்துறை பொருள்களுக்கான அடிப்படை மூலப்பொருளாகவும் உள்ளது. இதற்காக சா்வதேச அளவிலான கண்காட்சியையும் இந்தியா நடத்துகிறது. இதில், உலகெங்கிலும் உள்ள முக்கிய இறக்குமதி நாடுகளுடன் வாங்குபவா் - விற்பனையாளா் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் 220 ஆய்வகங்கள்: இந்தியாவில் புவியியல் குறியீடுகள் (எஐ) பதிவு செய்யப்பட்ட விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை மேம்படுத்துவதற்கு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. மேலும். ஏற்றுமதி செய்யப்படும் தயாரிப்புகளின் தடையற்ற தரச் சான்றிதழை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் 220 ஆய்வகங்களை அங்கீகரித்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.