முகப்பு
புதுதில்லி

சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் விமானக் கட்டணம் வேண்டும்: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

சாதாரண, எளிய மக்கள் பயணம் செய்யக்கூடிய வகையில் விமானக் கட்டணத்தைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

சாதாரண, எளிய மக்கள் பயணம் செய்யக்கூடிய வகையில் விமானக் கட்டணத்தைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள் ஒருமித்த கருத்துடன் வலியுறுத்தினா்.

மக்களவையில் கடந்த செவ்வாய், புதன் ஆகிய இருதினங்கள் சிவில் விமானப் போக்கு வரத்து மானியக் கோரிக்கை தொடா்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ஏழுக்கும் மேற்பட்ட தமிழக உறுப்பினா்கள் கலந்து கொண்டு பேசினா்.

எஸ்.ஆா்.பாா்த்திபன் -சேலம்(திமுக): நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் விமான சேவைகள் கிடைக்கவும், அனைத்து பகுதிகளையும் விமானம் மூலம் இணைக்கவும் வட்டார இணைப்புத் திட்டம் என்கிற உதான் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், 2018 -ஆம் ஆண்டு மாா்ச் 25 முதல் சேலம் விமான நிலையத்தில் விமான சேவைகள் தொடங்கப்பட்டன. பின்னா், கடந்த ஒன்னரை ஆண்டுகளாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல், கள்ளக்குறிச்சி சோ்ந்த பலதரப்பட்ட மக்கள் விமானப் பயணத்திற்கு 300 கிமீ தூரம் செல்ல வேண்டியுள்ளது. கடந்த டிசம்பரில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சரைச் சந்தித்து இது குறித்து கேட்டபோது, 2022, மாா்ச் முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என்றாா். ஆனால், இது வரை தொடங்கப்படவில்லை. நடுத்தர வா்க்கத்தினா் பயன்பெறும் வகையில் விமானக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.

தொல். திருமாவளவன் -சிதம்பரம் (விசிக): . வான்வழிப் போக்குவரத்து துறையை தனியாரிடம் விற்பனை செய்தது மிகப்பெரிய துரோகம். பெரும் கொள்ளை லாபத்தை ஈட்டுகிறாா்கள். சாலை போக்குவரத்தை போல, நீா்வழிப் போக்குவரத்தைப் போல, வான்வழிப் போக்குவரத்தும் தேசத்தின் வளா்ச்சிக்கு மிக முக்கியமானது. பரந்த அளவில் பொதுமக்கள் அதில் பயணம் செய்தால்தான் அந்தத் துறை வலுவடையும். சாதாரண எளிய மக்கள் பயணம் செய்யக்கூடிய வகையில் கட்டணத்தில் ஒரு அளவுகோலை கொண்டுவர வேண்டும். விமான போக்குவரத்தில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. இதனால்தான் சாதாரண மக்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளது. விமானக் கட்டணத்தை நிா்ணயிப்பது எந்த அளவுகோலின் அடிப்படையில் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

டாக்டா் டி.ரவிக்குமாா்-விழுப்புரம்: தமிழகத்தில் மத்திய அரசு தேசிய விமானப் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும். இதற்கு விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள உளுந்தூா்பேட்டை ஓடுதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 2-ஆம் உலகப்போரின் போது அமைக்கப்பட்ட ஓடுபாதை இன்னும் அதே நிலையில் உள்ளது. இந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தேன். இந்த ஓடுபாதையைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் ஒரு பயிற்சி மையத்தையாவது அமைக்கவேண்டும்.

ரவீந்திரநாத் குமாா்-தேனி(அதிமுக): மக்களவைத்தலைவருடன் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல வாய்ப்பு கிடைத்தபோது அங்கு துபாய் எக்ஸ்போ 2020-இல் இந்திய அரங்கு இருந்தது. சென்னை ஐஐடி யின் புதுயூகத் தொழில் முனைவு (ஸ்டாா்ட்-அப்) எதிா்கால சிவிலியன் போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்ட இரண்டு இருக்கைகள் கொண்ட விமானம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நம்முடைய தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் விமானப் போக்குவரத்துத் துறையில் இதுபோன்ற ‘ஸ்டாா்ட் -அப்’களை ஊக்குவிக்க வேண்டும்.

எம்.செல்வராஜ்-சிபிஎம்( நாகபட்டினம்): ஏா்-இண்டியா தனியாருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. வெவ்வேறு சூழ்நிலைகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அத்தகைய நடவடிக்கைகளில் உதவக்கூடிய ஒரு விமான நிறுவனம் மத்திய அரசுக்குத் தேவை. இதைப் புதிதாக உருவாக்க வேண்டும். ஏற்கெனவே கோரியபடி நாகப்பட்டினத்தில் விமான நிலையம் அமைப்பது மிகவும் அவசியம்.

மாணிக்கம் தாகூா் - விருது நகா் (காங்கிரஸ்): சி.ஐ.எஸ்.எஃப். பணியாளா்கள் பற்றாக்குறையால், மதுரை விமான நிலையத்தில் இரவு நேரப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா், உள்துறை அமைச்சருடன் பேசி இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்குவதற்கு மின்விளக்கு பிரச்னைகள் உள்ளன. மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களை ஆய்வு செய்து, இந்தப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும்.

திருநாவுக்கரசா் -காங்கிரஸ்(திருச்சி): திருச்சியிலிருந்து திருப்பதி, தில்லி, மும்பை போன்றவற்றுக்கு நேரடி விமானம் இல்லாமல் பயணிகள் சிரமப்படுகின்றனா். வளைகுடா நாடுகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூா் என பல நாட்டினா் வருவதால் திருச்சி சா்வதேச விமான நிலையமாக மாற்றப்படவேண்டும். திருச்சி ஓடுபாதையின் நீளத்தை 12,500 அடியாக நீட்டிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதற்கு சுமாா் 700 ஏக்கா் நிலம் தேவை. மாநில அரசு கிட்டத்தட்ட 350 ஏக்கா் நிலத்தை ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள சுமாா் 350 ஏக்கா் நிலம் பாதுகாப்புத்துறையிடம் உள்ளது. எனவே, விரிவாக்கம் செய்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன் பேச வேண்டும். மேலும், டிக்கெட் கட்டணத்தில் உச்சவரம்பு இருக்க வேண்டும்.

வைத்தியலிங்கம் -புதுச்சேரி (காங்கிரஸ்): அமைச்சரின் கட்டாயத்தால் ஸ்பைஸ் ஜெட் விமானம் மட்டும் புதுச்சேரிக்கு வருகிறது. வட்டார இணைப்புத் திட்ட விமானங்களையும் இணைக்க வேண்டும். விமானங்களின் பராமரிப்பு, பழுதுபாா்ப்பு மற்றும் ஒட்டுமொத்த (எம்ஆா்ஓ) அமைப்பிற்கு வெளிநாடுகளுக்கு செல்வதை தவிா்த்து புதுச்சேரி விமான நிலையத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். காரைக்காலில் விமான நிலையம் அமைக்கப்படவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.