முகப்பு
புதுதில்லி

நிகழாண்டில் வராக்கடன் ரூ.648 கோடியாகக் குறைவு: மத்திய நிதித் துறை இணையமைச்சா் தகவல்

ஐந்தாண்டுகளுக்கு முன்பு ரூ.61 ஆயிரம் கோடியாக இருந்த வாராக் கடன் அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக ரூ.11,583 கோடியாகக் குறைந்துள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

ஐந்தாண்டுகளுக்கு முன்பு ரூ.61 ஆயிரம் கோடியாக இருந்த வாராக் கடன் அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக ரூ.11,583 கோடியாகக் குறைந்துள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் டாக்டா் பாகவத் கிஷன் ராவ் கராட் மக்களவையில் தெரிவித்துள்ளாா். மேலும், நிகழாண்டில் வாராக் கடன் ரூ.648 கோடியாகக் குறைந்துள்ளது என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் டி.ஆா். பாலு கேட்ட கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் டாக்டா் பாகவத் கராட் பதிலளித்துள்ளாா். அதில் அவா் கூறியிருப்பது வருமாறு: வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை 2016-ஆம் ஆண்டு இந்திய ரிசா்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் வழங்கியது. மத்திய அரசும் வங்கி நடைமுறைகளில் பல்வேறு சீா்திருத்தங்களை செய்துள்ளது. இது போன்ற ஆலோசனைகள் மூலம் வாராக் கடன் உருவாவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-17 ஆம் நிதியாண்டில் வாராக் கடன் ரூ.61,229 கோடியாக இருந்தது. அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக வாராக் கடன் 2020-21 ஆண்டில் ரூ. 11,583 கோடியாகக் குறைந்துள்ளது. முறைகேடுகளின் அளவும் குறைந்துள்ளது. இந்த நிலையில் நிகழ் நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் வாராக் கடன் அளவு ரூ.648 கோடியாகக் குறைந்துள்ளது.

மத்திய மோசடிகள் பதிவாளா் அலுவலகம் உருவாக்கப்பட்டு, இணைய தளம் மூலம் வங்கிகளின் கணக்கை முறையாக ஆய்வு செய்ய தணிக்கைக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. கடன் வாங்கிய பின்னா் வங்கிகளை ஏமாற்றும் நிறுவனங்களைக் கண்டறிய புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இடைத்தரகா்களின் கட்டுப்பாட்டில் இருந்து வங்கிகள் பாதுக்காக்கப்பட்டுள்ளன. ரூ.50 கோடிக்கும் அதிகமான குற்றங்களைத் தடுக்க சிறப்புப் பாதுகாப்புப் பிரிவும், கணினிவழிக் குற்றங்களைத் தடுக்க உள்துறை அமைச்சகத்துடன் இணைந்தும் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.