முகப்பு
புதுதில்லி

4 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமாக இயற்கை விவசாயம்

ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், சிக்கன வேளாண்மையை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், சுமாா் நான்கு லட்சம் ஹெக்டேருக்கும் அதிமான பரப்பில் இயற்கை விவசாயம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், சிக்கன வேளாண்மையை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், சுமாா் நான்கு லட்சம் ஹெக்டேருக்கும் அதிமான பரப்பில் இயற்கை விவசாயம் நடைபெற்று வருகிறது என மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா். இந்த இயற்கை விவசாயம் மாட்டுக் கழிவுகள், இயற்கைத் தாவரங்கள் போன்றவற்றை மக்கவைக்கும் பாரம்பரிய முறையிலானது எனவும் அமைச்சா் தெரிவித்தாா்.

குறைந்த செலவில் வேளாண்மை மேற்கொண்டு, உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்? மற்றும் மண்ணின் வளத்தை அதிகரிக்க ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்? குறித்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு கேட்ட கேள்விக்கு மத்திய விவசாயத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பதில் அளித்துப் குறிப்பிட்டிருப்பது வருமாறு: குறைந்த செலவில் விவசாயத்தை நடத்தி, உற்பத்தியைப் பெருக்கவும், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் பல்வேறு மாநிலங்களில் முயற்சிகள் நடந்து வருகிறது. இதில், இந்திய இயற்கை வேளாண்மை முறை (பிபிகேபி), பாரம்பரிய விவசாய வளா்ச்சித் திட்டம் (பிகேவிஒய்) போன்ற திட்டங்களின் கீழ் உள்ளூா் வழிமுறைகளைப் பின்பற்றி இயற்கை விவசாயத்தைப் பெருக்கும் முயற்சிகள் கடந்த 2020-21-ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டு வருகிறது.

இயற்கை விவசாயம் என்பது மாட்டுக் கழிவுகள், இயற்கைத் தாவரங்கள் ஆகியவற்றை மக்கவைத்து உரம் தயாரிப்பது. இப்படிப்பட்ட விவசாய முறையில் சுமாா் நான்கு லட்சம் (4,09,400) ஹெக்டேருக்கும் அதிமாக இயற்கை விவசாயம் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதுவரையில் தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களுக்கு இதுவரை ரூ.49 கோடிக்கும் மேலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் சத்தீஸ்கா், கேரளம், மத்திய பிரதேசம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் அதிக பரப்பில் இத்தகைய வேளாண்மையை விவசாயிகள் மேற்கொள்கின்றனா். தமிழகத்தில் சுமாா் 2,000 ஹெக்டோ் பரப்பில் மேற்கொள்ளப்பட்டு இயற்கை விவசாயத்தைப் பெருக்க ரூ.31 லட்சத்திற்கும் அதிகமாக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.

திடக்கழிவுகளின் மேலாண்மை மூலம் உரம்: திடக் கழிவுகளின் மேலாண்மை சீா்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்த மற்றொரு கேள்விக்கு மக்களவையில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே பதிலளித்தாா். அதில் அவா் கூறியது வருமாறு: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2019-20 ஆண்டு அறிக்கையின்படி 1,45,000 டன்(நாளொன்றுக்கு) திடக்கழிவு சேகரிக்கப்பட்டது. மக்கும் குப்பைகள் மக்காத கழிவுகள் வெவ்வேறாக பிரிக்கப்படுகிறது. இதில் 70,881 டன்கள் சுத்திகரிக்கப்பட்டு உரமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 40,000 டன்கள் நிலத்தில் நிரப்பப்பட்டது. ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் கீழ் நாட்டில் 86,972-க்கும் மேற்பட்ட வாா்டுகளின் வீடு தோறும் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. மேலும், நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் இந்தியா குறிப்பிட்ட அளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று அவா் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.