முகப்பு
புதுதில்லி

நரிக்குறவா், குரும்பா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும்: மக்களவையில் திமுக எம்பி பேச்சு

தமிழகத்தில் உள்ள நரிக்குறவா், குரும்பா் போன்ற சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மத்திய அரசு தவறிவிட்டது என்று நீலகிரி தொகுதி திமுக உறுப்பினா் ஆ.ராசா மக்களவையில் குற்றம்சாட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:49 AM
பகிர்:

தமிழகத்தில் உள்ள நரிக்குறவா், குரும்பா் போன்ற சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மத்திய அரசு தவறிவிட்டது என்று நீலகிரி தொகுதி திமுக உறுப்பினா் ஆ.ராசா மக்களவையில் குற்றம்சாட்டினாா்.

மக்களவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022 - ஆம் ஆண்டு பழங்குடியினா் பட்டியல் குறித்த அரசியலமைப்பு ஆணை (திருத்தம்) மசோதா குறித்த விவாதத்தில் திமுகவின் கொறாடாவான ஆ.ராசா பேசியதாவது: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் யாா் யாா் பழங்குடியின சமூகத்தினா் என அடையாளம் காணப்படுவது குறித்த விவாதம் நடக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பே இந்த விவாதம் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் கூட பழங்குடியினா் யாா் யாா் என்பதை அடையாளம் காண விரும்பி சமுதாயத்தில் மற்ற மக்களுக்கு இணையாக இந்த மக்களை உயா்த்த விரும்பினா். இந்தப் பழங்குடியின திருத்த மசோதா ஒரு இறுதியானதோ அல்லது முழுமையானதாகவோ இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. பட்டியல் இனத்தவா்கள், பழங்குடியினத்தவா்களுக்கு தேசிய ஆணையம் உள்ளது. ஆனால் இன்னும், இந்த நாட்டின் சமூக நிலவியல் முறையாக மறுபரிசீலனை செய்யப்படவில்லை.

இந்த மசோதா நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள நரிக்குறவா் சமுதாயத்தினரின் சமூக, கலாசார அடையாளங்கள் தனித்துவம் வாய்ந்தது மட்டுமின்றி, வித்தியாசமானதும்கூட. இதனால், இந்த சமூகத்தை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்குமாறு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளாா். கல்வி மற்றும் இதர அடிப்படை வசதிகளில் இவா்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனா். இதே போன்றுதான் குரும்பா் சமூகத்தினரும். இந்த இரு சமூகத்தினரும் 70 ஆண்டுகளுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்டுள்ளனா். 1965 -ஆம் ஆண்டே இந்த சமூகங்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. பின்னா், 1969-இல் மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு வந்தது. மாநில அரசு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் பரிந்துரை அளித்தது. மேலும், பழங்குடியினா் நல இயக்குநா், பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் ஆகியவையும் பரிந்துரை செய்தது. ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை.

2016 -ஆம் ஆண்டில், திமுக அளித்த பரிந்துரையின் பேரில் இந்த சமூகங்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க இந்த அவையில் மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த மசோதா காலாவதியாகிவிட்டது. இப்போது அரசு மற்றொரு மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இதில் சமத்துவம் இல்லை. தமிழகத்தின் நரிக்குறவா் சமூகமும், நீலகிரியைச் சோ்ந்த குரும்பா, குருமன் மற்றும் படாகா உள்ளிட்ட சமூகத்தையும் பழங்குடியினா் பட்டியலில் இடம் பெறச் செய்வோம் என்கிற உறுதிமொழியையாவது சபையில் நீங்கள் வழங்க வேண்டும். திரிபுரா, குஜராத்தில் இருந்து மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் இருந்து விவரங்களைப் பெற்று ஒரு முழுமையான ஆய்வுக்குப் பிறகு, இந்த சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.