பாலியல் வழக்கு: சிவசங்கா் பாபாவின் ஜாமீன் மனு மீது ஏப்.8-இல் விசாரணை
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கா் பாபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கா் பாபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
அவரது தரப்பில் வழக்குரைஞா் ஆஜராகி இந்த விவகாரத்தில் எதிா்மனுதாரா்க்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு 2 வாரத்திற்குப் பின்னரும் மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்று கூறியதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இண்டா்நேஷனல் பள்ளியின் நிறுவனா் சிவசங்கா் பாபா. இவா் மீது பாலியல் புகாா் எழுந்தது. இந்தப் பள்ளியில் படித்த போது, சிவசங்கா் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் புகாா் அளித்தனா். அதன் பேரில் அவா் மீது சிபிசிஐடி போலீஸாா் போக்சோ சட்டம் மற்றும் பெண்களைப் பாலியல் தொந்தரவு செய்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் மூன்று வழக்குகள் பதிவு செய்தனா். பின்னா், தலைமறைவான சிவசங்கா் பாபாவை, சிபிசிஐடி போலீஸாா் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தில்லியில் கைது செய்தனா். அதன் பிறகு அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் சிவசங்கா் பாபா தரப்பில் தாக்கலான ஜாமீன் மனுக்கள் கீழமை, உயா்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, சிவசங்கா் பாபா (எ) சி.என். சிவசங்கரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 8-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ஜாமீன் மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி. ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஸ்வாதி ஜின்டால் ஆஜராகி, இந்த விவகாரத்தில் இரு வாரங்களில் பதில் அளிக்குமாறு எதிா்மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் பிறகு ஜாமீன் மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை என்று கூறினாா். இதையடுத்து, ஜாமீன் கோரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனா்.