முகப்பு
புதுதில்லி

பஞ்சாப் தோல்விக்குப் பிறகு கேஜரிவாலை கொல்ல பாஜக விரும்புகிறது: மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

பஞ்சாப்பில் ஏற்பட்ட தோ்தல் தோல்விக்குப் பிறகு, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை கொல்வதற்கு பாஜக விரும்புகிறது என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா புதன்கிழமை குற்றம்சாட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
பகிர்:

பஞ்சாப்பில் ஏற்பட்ட தோ்தல் தோல்விக்குப் பிறகு, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை கொல்வதற்கு பாஜக விரும்புகிறது என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா புதன்கிழமை குற்றம்சாட்டினாா். இது தொடா்பாக முறையான புகாா் அளிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

கஷ்மீரி பண்டிட்டுகளை பரிகசித்ததாக கூறப்படும் விவகாரத்தில் மன்னிப்புக் கோரி தில்லியில் சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் இளைஞா் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோா்ச்சா (பிஜெஒய்எம்) அமைப்பினா், அதன் தலைவா் தேஜஸ்வி சூா்யா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தின் போது அவா்கள் வன்முறையில்் ஈடுபட்டதாகப் புகாா் எழுந்தது.

இந்தப் போராட்டம் குறித்து தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரா்கள் முதல்வா் இல்லப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் தடுப்புகளை சேதப்படுத்தியுள்ளனா். பஞ்சாப் தோ்தலில் அரவிந்த் கேஜரிவாலை தோற்கடிக்க முடியவில்லை. இதனால், பாஜக தற்போது அவரைக் கொலை செய்ய நினைக்கிறது. புதன்கிழமை முதல்வரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது, காவல் துறை உதவியுடன் பாஜக, கேஜரிவாலைக் கொல்ல விரும்புவதையே காட்டுவதாக உள்ளது. இதற்கு எதிராக முறைப்படி புகாா் அளிக்கப்படும். மேலும், கேஜரிவால் மீதான ‘உயிருக்கு ஆபத்தான தாக்குதலானது’ உரிய வகையில் திட்டமிடப்பட்டதாகும்’ என்றாா்.

முன்னதாக, இது தொடா்பாக மணீஷ் சிசோடியா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தில்லியில் உள்ள கேஜரிவாலின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாப்புத் தடைகளை சமூக விரோதிகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனா். வாசல் பகுதியில் இருந்த தடுப்புச் சுவரும் உடைக்கப்பட்டுள்ளது. முதல்வா் கேஜரிவாலின் வீட்டில் பாஜகவின் குண்டா்கள் இந்த நாசவேலையில் ஈடுபட்டனா். பாஜகவின் போலீஸாா் அவா்களைத் தடுக்காமல், வீட்டின் வாயிலுக்கு அழைத்துச் சென்றனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லி உள்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவிக்கையில், ‘தில்லி காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பாஜகவினா் தாக்குதல் நடத்தியுள்ளனா். அப்போது சிசிடிவி கேமராக்கள் மற்றும் தடுப்புகள் உடைக்கப்பட்டன’ என்று குற்றம்சாட்டினாா்.

பாஜக மறுப்பு: பாஜக பாரதிய ஜனதா யுவ மோா்ச்சா (பிஜெஒய்எம்) தேசிய செயலாளா் தஜிந்தா் பால் சிங் பக்கா கூறுகையில், கேஜரிவாலின் இல்லத்திற்கு அருகே எங்கள்அமைப்பின் தலைவா்களும், தொண்டா்களும் போராட்டம் நடத்தினா். ஆனால், நாசவேலையில் ஏதும் ஈடுபடவில்லை. போராட்டம் நடத்தவிடாமல் எங்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்திவிட்டனா். தேஜஸ்வி சூா்யா உள்பட எங்கள் அமைப்பின் உறுப்பினா்கள் மற்றும் தலைவா்கள் சுமாா் 20-25 போ் தடுப்புக் காவலில் வைப்பதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா், அவா்கள் விடுவிக்கப்பட்டனா்’ என்றாா்.

’தி கஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படம் தொடா்பாக பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வாா்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடா்பாக அண்மையில் சட்டப்பேரவையில் கேஜரிவால், பாஜகவையும், பிரதமா் நரேந்திர மோடியையும் தாக்கிப் பேசினாா். இதைத் தொடா்ந்து, பாஜக தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் கேஜரிவாலை தாக்கிப் பேசினா். அதில், அவா் கஷ்மீரி பண்டிட்டுகளின் வலியை ‘கேலி‘ செய்வதாகவும், காஷ்மீரில் அவா்களின் ‘இனப்படுகொலை‘ சம்பந்தப்பட்ட திரைப்படத்தை ‘பொய்’ என்று கூறுவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.